ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றிரவு தெரிவித்தார்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து மஹிந்த ராஜபக்ச பதற்றமடைந்துள்ளார். இந்நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை 7ஆம் திகதி சந்திக்க வருமாறு கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய இந்தச் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.
ஆயினும், நாளைய சந்திப்பில் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கூட்டமைப்பின் எம்.பி. வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணிப் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் தாம் எப்படி இந்தச் சந்திப்பில் பங்கேற்பது எனக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.