நெல்சன் மண்டேலாவென்றவர்கள் துரோகியென்பதா? நீதியரசர் கேள்வி!

இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள். இதில் எந்த  அர்த்தமும் இல்லையென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்துதான் நாம் அவர்களுடன் கரம் கோத்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து உலகுக்கு நல்லாட்சி என்றோம். ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம்.   நாமே அவர்களை மனித உரிமைகள் சபையில் பிணை எடுத்தோம். அரசியல் அமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு சென்று எமது தனித்துவத்தையும் அரசியல் அபிலாஷைகளையும் கரைத்துவிட்டோம்.

ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான  சகல தடைகளையும் உடைத்துவிட்டு  எந்த விதமான  குற்ற உணர்வும் இன்றி தமக்கிடையில் ஒரு அதிகார போட்டியில்  இறங்கியுள்ளனர். இந்த அதிகாரப்போட்டியில்  யார் கூடுதலாக தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும் என்ற உத்தியை மாண்புமிகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையில் எடுத்துள்ளார்.  தான் உயிருடன் இருக்கும் வரை வட கிழக்கு இணைப்புக்கோ சமஷ்டித் தீர்வுக்கோ இடமளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். அவரை வைவதால் ஆவது ஒன்றுமில்லை. அவருடன் சேர்ந்து பேசுவதாலும் எதுவும் ஆகப்போவதில்லை. சர்வதேசங்கள் தான் இதுபற்றி கவனஞ் செலுத்த வேண்டும். 

ஒரு நிகழ்ச்சிநிரல் இன்றி செயற்பட்டமையே  இன்றைய எமது இந்த கையறு நிலைக்கு காரணமாகும். எது எவ்வாறெனினும், நடந்தவை நடந்து முடிந்துவிட்டன. இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந் தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல்  ஒன்றுக்கு அமைவாக நிறுவனப்பட்ட செயற்பாட்டை நாம் முன்னெடுக்கவேண்டும். அதாவது இருட்டில் கையாட்டிப் பார்க்காமல் பாதை தெரிந்து பயணிக்க வேண்டும்.

இன முரண்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் மனோநிலையை உலக்கு எடுத்தியம்ப வேண்டும். ஒற்றையாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல் அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பு சார் தடைகளை சர்வதேச சமூகம் இனிமேலாவது புரிந்துகொள்ள வழி வகுக்க வேண்டும்.  தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமன் என்பதைப் புரிந்துகொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வழி வகுக்க வேண்டும். சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சனைகளைச் சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது. நாம் எமது கடமைகளைச் சரியாக ஆற்ற முன் வர வேண்டும்.

இது சம்பந்தமாக எதிர்வரும்  ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்குமாறு உறுப்புநாடுகளையும் ஏனைய நாடுகளையும் எம் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கின்றேன்.

இலங்கையில் எவர் ஆட்சியில் உள்ளார்கள் என்று பார்த்து செயற்படாது  பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள 'இலங்கை அரசு' என்ற ரீதியில்  போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன். இதன் ஊடாகவே எமது சிங்கள சகோதரர்களுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்ல முடிவதுடன் அதனால் புரிந்துணர்வை ஏற்படுத்தி உண்மையான இன  நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். இல்லாதுவிட்டால் குற்றம் இழைத்தவர்கள்  தம்மைப் பாதுகாப்பதற்காக போலித் தேசியவாதத்தைக் கையில் எடுத்து இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்துவதற்கே இன்றைய நிலைமைகள்  வழிவகுக்கும். எமது மக்கட் தலைவர்கள் விரைந்து செயற்படுவார்களா? என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila