புலிகள் செயற்பட்டது போன்று கூட்டமைப்பால் செயற்பட முடியாது என்கிறார் சுமந்திரன் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டதனைப் போல தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரால் செயற்பட முடியாது. கூட்டமைப்பினர் ஒரு வித்தியாசமான அணி என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் இடம்பெற்ற கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதுரையும் என்ற மக்கள் மனமறியும் கருத்தரங்கு நிகழ்வில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;,

புலிகளின் நீட்சியே கூட்டமைப்பு எனப் பலரும் பார்க்கின்றனர்.ஆனால் புலிகள் செய்ததனைப் போல் எம்மால் செயற்பட முடியாது. காணி பறிபோகிறது, சட்ட விரோத குடியேற்றம் இடம்பெறுகிறது என்றால் புலிகள் செயற்பட்ட விதம் வேறு.நாம் அணுகுகின்ற விதம் வேறு. அவர்கள் செய்ததனைப் போல் நாம் செய்ய இயலாது. ஆனால் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்க நடவடிக்கமேற்கொள்கிறோம்.இதற்கு முடிவும் கட்டுவோம்.

நாம் புலிகளைப் போல் அல்லாமல் பேரம் பேசும் முறை மூலமாகவே எதனையும் செய்ய முடியும். புலிகள் செய்த தியாகங்களை மதிக்கிறோம். ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவரும் இல்லை. புலிகள் காலத்தில் ஒற்றுமை பேணப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். அந்த ஒற்றுமை எவ்வாறு பேணப்பட்டது? தம்மைத் தவிர வேறு அமைப்பு இருக்கக்கூடாது என்று கட்டளை இடப்படும். அந்தக் கட்டளையை மீறினால் சுடப்பட்டனர். நாம் புதுக்கட்சி தொடங்கியவர்களை இவ்வாறு செய்ய முடியுமா? ஒற்றுமையைப் பேண துப்பாக்கியைப் பயன்படுத்த முடியாது.

ஒற்றுமையைப் பேண வேண்டுமானால் எதிர்த்தரப்பினருடன் நியாயமான முறையில் அணுகிப் பேச வேண்டும். அத்துடன் கூட்டமைப்பில் இருந்து எந்தக் கட்சியையும், எந்தத் தனி மனிதரையும் நாம் வெளியே போகச் சொல்லவில்லை.போனவர்கள் தாங்கள் சுயமாகவே வெளியேறிச் சென்றனர். சிலர் கட்சி யில் இருந்து போவதும் வருவதுமாகவும் இருக்கின்றனர். அதனையும் நாம் அனுமதிக்கிறோம். தாமாக வெளியே போய் புதுக்கட்சி ஆரம்பித்தால் நாம் அதனைத் தடுக்க முடியாது என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila