யாழ்ப்பாணத்திலுள்ள ஜேவிபியின் நான்கு வெங்காயங்களையும் நாக்கை புடுங்குவது போல தமிழ் மக்கள் கேள்வி கேட்கவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த்.
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (12) முன்னெடுக்கப்படுகின்ற போராட்டக்களத்தில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.
எனவே அவர்களுக்கு ஒரு நீதி இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் மாவட்டத்திற்கு மாவட்டம் என்ற அடிப்படையில் தான் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. பல்கலைக்கழக அனுமதி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் வரை அந்த அடிப்படையிலேயே வரையறை செய்யப்படுகின்றது.
மாவட்டத்தினுடைய இனப்பரம்பலை சிதைக்கும் பொழுது எங்களுடைய உரிமைகளை நாங்கள் முற்றாக இழக்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் காணிகளைத் தொலைத்து நிற்பவர்களை உரிமையற்றவர்களாகவே பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று புதன்;கிழமை மாலை முதல் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்;ளது.
போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்று புதன்கிழமை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு பல கட்சிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளன.
இதனிடையே அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை போராட்டத்திற்கு இணைந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு போராட்ட தடை நீதிமன்றினால் விதிக்கப்பட்ட போதும் அதனை தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.