முஸ்லிம் மக்கள் மைத்திரிக்கும் மு.காங்கிரஸின் அரசியல்வாதிகள் மஹிந்தருக்கும் ஆதரவு

நாட்டில் மிகவும் முக்கியத்துவமிக்க ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். மஹிந்தர் மூன்றாம் முறையாகப் போட்டியிடுவது.
மஹிந்தரின் கூட்டுக்குள்ளிருந்து மஹிந்தரை எதிர்த்துக் களமிறங்கியிருக்கும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரி பொது வேட்பாளராகக் களமிறக்கம்.
ஐ.தே.க.யும் நீலமும் இணைந்து போட்டி, ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பல கட்சிகள் இணைந்து மஹிந்தவுக்கு எதிராக களமிறக்கம்.
சந்திரிகா நேரடியாக மஹிந்தருக்கு எதிராக களமிறக்கம். கட்சித்தாவல்கள், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம் இப்படியாக பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேர்தல் நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் இப்படியான ஒரு பொது அணியைக் கண்டதில்லை.  ஆனாலும் நாங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுதியது போன்று நாட்டில் ஒரு ராணுவ ஆட்சி வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. அந்தளவு நிலைமையுள்ளது.
மற்றும் உச்சகட்ட அச்சுறுத்தல்கள், கொலைப் பயமுறுத்தல்கள். தாக்குதல்கள்மற்றும் சந்திரிகா அம்மையாரைக் கொல்லத் துடிக்கும் கொலைக் கூட்டம் மற்றும் என்ன விலை கொடுத்தும் மஹிந்தர் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் உச்ச கட்ட அன்பளிப்புக்களை வாக்காளர்களுக்கு  அரசு  வழங்கி வருகின்றது.
அரசு பயந்து விட்டது
உண்மையிலேயே அரசு மைத்திரிக்கு நன்கு பயந்து விட்டது.காரணம் தனது கூட்டுக்குள்ளிருந்து தனக்கு எதிராக இப்படி ஒருவர் கிளம்புவார் என்று மஹிந்தர் கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
மைத்திரியின் வருகையால் அரசு ஆடித்தான் போய்விட்டது. வாக்காளர்களைக் கவரும் அதிக அன்பளிப்புகள் நாளாந்தம் அரசின் முகவர்களால் நாடங்கிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசு ஆட்டம் கண்டு விட்டது. கரு ஜெயசூரிய பொது வேட்பாளர் என்றதும் மஹிந்தர் உடனடியாக வாழத்துத் தெரிவித்தார். அப்படியானால் தோல்வி  பயமில்லையென்றால் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவிக்கலாம்தானே அரசுக்கு தோல்வி பயம் கவ்விக் கொண்டுள்ளது.
அதனால்தான் அரசு கோவையுள்ளதாகப்  பயம் காட்டுகின்றது. அதனால் மைத்திரி பக்கமாகத் தாவும் நிலையில் இருந்த பலர் இன்னும் கட்சிதாவப் பயப்படுகின்றனர். இருந்தாலும் அடுத்த வாரங்களில் தேர்தல் நெருங்கும் தறுவாயில் பலர் மஹிந்தருக்கு கோவிந்தா போடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம்களின் நிலை 
நாட்டிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்களின் ஆதரவுகளும் வாக்குகளும் 95 வீதமானவை மைத்திரிக்குத்தான் உள்ளது.
கடந்த காலங்களில் சிங்கள இனவாத பொதுப்பல சேனாவை அரசு ஊக்குவித்து முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் பள்ளி உடைப்புக்கள், முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீதான இறுக்கம் போன்றவற்றால் நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும், ஆள்மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பபாடே உள்ளது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் மஹிந்தருக்குத்தான் ஆதரவு என்று தெரிவித்து விட்டார்கள்.
அமைச்சர் அதாவுல்லா ஏற்கனவே தனது ஆதரவு மஹிந்தருக்குத்தான் என்று அறிவித்து விட்டார். அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின்  ஆதரவும் மஹிந்தருக்குத்தான்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும், ஆள்மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளார்கள். முஸ்லிம்கள் என்பது மூன்றாம் இனம் இரண்டாவது சிறுபான்மையினம் என்ற வகையிலும் இவர்களால் ஆட்சி மாற்றம் செய்ய முடியாது என்றாலும் மைத்திரி வெல்ல வேண்டுமானால் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானது.
மஹிந்தருக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாது வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மைத்திரி வெற்றிபெற வேண்டுமானால் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மிக மிக அவசியமானது.
முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அத்தனை பேரும் அரசுக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார்கள். காரணம் கிழக்கு மகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 40 ஆயிரம் ரூபா தங்களது மாதாந்த ஊதியத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அரசுக்கான அதரவு வாபஸ் வாங்கப்பட்டால் இந்தக் கொடுப்பனவு கிடைக்காது. அதனால் மு.கா.அரசுக்குத்தான் அதரவு வழங்க வேண்டும் என்று ஒரே  கொள்கையில் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக திருமலை மாவட்ட மகாண சபை உறுப்பினர் ஒருவர் விடாப் பிடியாக உள்ளார்.
மு.கா சின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைப் பொறுத்த மட்டில் எக்காரணம் கொண்டும் கிழக்கில் தமிழ் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்கக் கூடாது என்ற பிடிவாதத்தில் உள்ளார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழர்களோடு சேர்ந்திருக்க முடியாதாம்.
இவர்கள் எப்போதாவது தமிழர்களுடன் சேர்ந்திருக்கின்றார்களா. பள்ளிகள் உடைக்கப்பட்ட போது சம்பந்தன் பள்ளியுடைப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கண்டன உரையாற்றிய போது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் இந்த முஸ்லிம் எம்பிக்கள்.
இவர்கள் எந்தவொரு நிலையிலும் தமிழ் கூட்டமைப்போடு இணக்க அரசியலுக்கு வரமாட்டார்கள். முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் தமிழ் மக்களையும் தமிழ் கூட்டமைப்பையும் எட்டி உதைப்பது என்பது எதிர் காலத்தில் முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தான அரசியல் பயணம் என்பதை பலமுறை எழுதி விட்டோம். அதற்து முஸ்லிம்கள் அதிக விலை கொடுக்க வேண்ய நிலை ஏற்படும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது.
பாவக்காயை சாப்பிட்டுப் பார்க்காமல் அதைக் கசக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும். மு.கா இன்னும் தமிழ் கட்சியுடன் ஒரு நாளாவது இணையவில்லை.
கடந்த 24 ஆண்டுகளாக அரசுடன் குடும்பம் நடத்தும் மு.கா ஒரு நாளாவது ஒரு பொதுக் கொள்கைக்காவது தமிழ் தரப்புடன் ஒத்துப் போகாமல் வெளியில் நின்று கொண்டு சீ இந்தப் பழம் புளிக்கும் என்றால் எப்படி.இது சும்மா டூப்பு.
முஸ்லிம் மக்களை ஏமாற்ற எடுத்து விடப்படுகின்ற கதைகள்.தமிழ்த் தரப்புடன் இணைந்து ஆட்சியமைத்தால் தங்களுக்குக் கிடைக்கும் மேலதிக வருமானங்கள் மற்றும் கொந்தராத்துக்கள் கிடைக்காது.
துரைக்கின்ற நாய்களுக்கு முள்ளுத் துண்டு போதுமானது. இதுகளுக்கு சமூகம் எப்படிப் போனால் என்ன மக்கள் எக்கேடு கெட்டால் என்ன. நம்மட பக்கட் நிரம்பினால் சரி என்ற நிலையில்தான் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் என்கின்ற முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் உள்ளார்கள். மற்றும் சில எம்பிக்கள் அரசுக்குத்தான் ஆதரவு என்றும் உள்ளார்கள்.
இதேவேளை அம்பாறை மாவட்ட மு.கா ஹரீஸ் எம்.பி ஒருவர் கடந்த வாரம் மு.கா தலைவர் ஹக்கீமுக்குத் தெரியாமல் இரகசியமாக நாமல் ராஜபக்ச எம்.பியூடாக ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
அரசியல் சட்டத்தை மாற்றி தனக்கு கிழக்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் தான் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த எம்பியின் கோரிக்கையை உடன் அமைச்சர் பசில் நிராகரித்துள்ளார். இந்த எம்.பி. ஜனாதிபதியைச் சந்தித்த விடயம் உடனடியாக ஹக்கீமுக்கு தெரிந்து விட்டது. ஆனால் மு.கா உயர்பீடத்தில் இந்த எம்பி அரசுக்கு எதிராக போட்டுத்தாக்குவார்.
தனது ஊரிலும் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராகவும் ஊடகங்களிலும் அரசுக்கு எதிராகவும் போட்டுத் தாக்குவார். என்ன வேசம்ண்டா சாமி. இந்த மெகா நடிப்புக்களை இந்தப்பூமி தாங்குமா.தாங்குதுதானே.
கல்முனை ஜவாட் மைத்திரிக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்;. முஸ்லிம் காங்கிரசின் ஒவ்வொரு உயர்பீடக் கூட்டத்திலும் கல்முனை ஜவாட் மற்றும் அட்டாளைச்சேனை பழீல் பி.ஏ ஆகிய உயர்பீட உறுப்பினர்கள் மைத்திரிக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
ஆனால் இவர்களின்  கோரிக்கைகள் மு.கா சின் உயர்பீடத்தில் கணக்கில எடுக்கப்படுவதில்லையாம். காரணம் இவர்கள் அதிகாரப் பதவியில் இல்லை. மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இப்போது மக்களின் பின்னால் முஸ்லிம் அரசியல்வாதிகள். உள்ளார்கள்.
முஸ்லிம் ஈழம்
முஸ்லிம் காங்கிரஸ் தற்போது எடுத்துள்ள தேர்தல் ஆயுதம் என்பது முஸ்லிம் ஈழம் என்கின்ற முஸ்லிம் கரையோரக் கச்சேரி. இந்தக் கச்சேரி பற்றியும் இதன் நோக்கம் பற்றியும் ஏற்கனவே பலமுறை எழுதி விட்டோம் தற்போதும் இதுபற்றி எழுதவேண்யுள்ளது.
அம்பாறைக் கச்சேரியில் கடந்த மாதம் முதல் மேலதிக அரசாங்க அதிபராக சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர் என்பவர் நியமிக்;கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அரசை ஆதரிப்பதற்கு மு.கா இணங்கிய போது ஜனாதிபதியிடம் மு.கா முதலாவதாக முன்வைத்த கோரிக்கை இந்தக் கரையோர மாவட்டம்தான்.
அந்த வகையில் இந்த அமீர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்;பட்டுள்ளார். இந்த நியமனத்தினால் முஸ்லிம்களுக்கு எவ்விதமான நன்மையுமில்லை என்பது வேறு கதை.
கரையோர மாவட்டக் கோரிக்கை
இதுவரை காலமும் கரையோர மாவட்டம் என்று சொல்லிவந்த மு.கா. இப்போது முஸ்லிம் கரையோர மாவட்டம் என்ற புதிய உசுப்பேற்றலை ஆரம்பித்துள்ளது.
இது முஸ்லிம் ஈழம் மாதிரி இல்லையா.இது ஒரு நப்பாசை மாதிரியில்லையா. இந்த ஈழத்திற்கு சில அறிவிலிகள் ஆடுவார்கள். இது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று அமையப் போகின்றது.
இது நடக்கும் விடயமா? ஏற்கனவே பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மாவட்டம் அல்ல முஸ்லிம் ஈழம் என்று ஒரு தேவையில்லாத வம்பையும் புரளியையும் கிளப்பி விட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி தனது வெற்றிக்காக மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை நியமித்துள்ளார். அதில் எவ்விதமான அதிகாரமும் கிடையாது.  இந்தப் பதவியில் ஒன்றுமில்லை.ஆனால் பூச்சாண்டி காட்டுவார்கள்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இதயப்பகுதி கல்முனை. காலம் சென்ற அஷ்ரப்பின் கனவு அம்பாறை கரையோர மாவட்டம்.
அதாவது பொத்துவில் தொட்டு நாவிதன்வெளி வரையுமான 11 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்குவது என்ற கோசத்துடன்தான் மு.காகிளம்பியது.
கல்முனை கரையோர மாவட்டம் என்பது மு.காசின் மூன்று எம்பிக்கள் பெறுவது என்ற நப்பாசையில்தான் மீண்டும் இந்தக் கரையோர மாவட்டம் கிளம்பியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவி
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம் முதலமைச்சர் என்ற உசுப்பேற்றலை ஏற்படுத்தித்தான் மு.கா கிழக்கு  மாகாணம் முழுவதும் தேர்தலில் குதித்தது.
கிழக்கில் முதலமைச்சர் என்னும் பொம்மை முதல்வர் ஆட்சியை ஒளிப்போம் என்றுதானே கிழக்கு மாகாணம் முழுவதும் பிரச்சாரம் செய்தீர்கள்.
அஷ்ரப்பின் கனவு என்றெல்லாம் மக்களை ஏமாற்றினீர்கள்.தமிழ் கூட்டமைப்பு முதல்வர் பதவியைத் தருகின்றோம் என்று பகிரங்க அழைப்பு விடுத்த போதும் அதை நிராகரிக்கும் போதும் இப்போதைய வெறும் பொம்மை முதல்வர் என்று மு.கா வுக்குத் தெரியவில்லையா?
இரண்டரை ஆண்டு முடிந்த பின்பு மு.கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பெறும் என்று அரசிடம்  ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று வரையும் மு.கா. சொல்லி வருகின்றது. ஆனால் அப்படியொரு ஒப்பந்தம் இல்லவே இல்லையென்று அரசு சொல்கின்றது.
ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகின்றது இனிமேல் மு.கா கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி அரசிடமோ அல்லது வேறு எங்குமோ வாய் திறக்காது.
எதிர்வரும் பெப்ரவரியில் கிழக்கு முதலமைச்சரின் 2 அரை  ஆண்டு பதவிக் காலம் முடிவடைகிகின்றது. அப்போது இந்த முதலமைச்சர் பதவி பற்றிப் பார்ப்போம். இனிவரும் காலங்களில் முஸ்லிம் மாவட்டம் என்ற முஸ்லிம் ஈழத்தைக் கோரி நிற்பார்கள்.
மு.கா வுக்கு முஸ்லிம் கரையோர மாவட்டம் வேண்டுமாம். அதற்கு முன்னோடியாக கல்முனையில் மேலதிக அரச அதிபர் பணிமனையாம்.இப்போது புதிய புரளியொன்றாக இந்த முஸ்லிம் கரையோரக் கச்சேரி என்ற வித்தையை எடுத்து விட்டுள்ளார்கள்.
ஏற்கனவே இயங்கிய மேலதிக அரசாங்க அதிபர் பணிமனை
ஏற்கனவே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக 2005 ஆம் ஆண்டு கல்முனையில் தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த மேலதிக கரையோர கச்சேரியை மூடிவிடும்படி கடந்த 2009 ஆம் ஆண்டில் அரச உத்தரவொன்று கிடைத்ததனால் கல்முனை கரையோர மேலதிக கச்சேரி மூடப்பட்டு விட்டது.
சுனாமி பாதிப்புக்களைக் கவனிப்பதற்க்காக பொத்துவில் தொட்டு பெரிய நீலாவணை பகுதிகளிலுள்ள சுனாமி பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதற்காகவே கல்முனை மேலதிக அரசாங்க அதிபர் ஏற்படுத்தப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய  யூ.எல்.ஏ.அஸீஸ் என்பவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்
கல்முனையில் இந்தப் பணிமனை இயங்கியது.  தற்போது இந்த மேலதிக கச்சேரி அம்பாறைக் கச்சேரியுடன் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது. அதனால் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இவர் கிழக்கு மாகாண சபைக்குள் சென்றுவிட்டார்.
அதிகாரமில்லாத மேலதிக அரச அதிபர்
மேலதிக அரசாங்க அதிபர் பதவி என்பது ஒரு பிரதேச செயலாளருக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இல்லை. அப்படிப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர் என்பது அதில் ஒன்றுமே இல்லை.
ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தில் இருக்குமானால் அம்பாறை மாவட்ட கரையோரக் கச்சேரியை விட இந்த அரசில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசுபவரை பெற்று ஜெயித்துக் காட்ட வேண்டும்.
இந்த டிமாண்டை கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பின் போது காட்டியிருக்க வேண்டும்.அதைவிட்டு மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்கள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்பதையும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.உள்நோக்கம் கொண்டு மு.கா 3 எம்பிக்களைப் பெறும் எண்ணத்தில்தான்; இந்த முஸ்லிம் மாவட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாவட்டம் அமையுமானால் அதாவுல்லா வெற்றியடைய முடியாது.அதாவுல்லாவுக்கு ஆப்படிக்கவும் 3 எம்பிக்களைப் பெறவும்தான் இந்தப் புதிய புரளி எடுத்து விடப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களையே ஏலம் போட்டு விற்கின்ற இந்த வியாபாரிகள் முஸ்லிம் மாவட்டத்திற்குள் சிறுபான்மையினமாக தமிழ் மக்களை மாற்றிவிட்டு  தமிழ் மக்களையும் விற்று விடுவார்கள்.இந்த முஸ்லிம் மாவட்டத்திற்கு தமிழ் மக்களின் சார்பாகவோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவோ அல்லது வேறு எந்தத் தரப்புக்களோ எந்த விதமான ஆதரவும் அளிக்காது.
இந்தப் புரளியை மக்கள் நம்பாதீர்கள்.இது எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட நிலைதான்.முஸ்லிம் மாவட்டம் என்ற கோரிக்கை வந்தாலும் தமிழ் மக்களின் ஆசீர்வாத்துடன் பெறலாமேயொழிய சும்மா புதுப் புது வித்தைகளை எடுத்து விடக் கூடாது.கனவிலும் நடக்காத விடயம் இது. மக்களே நம்பாதீர்கள்.
பொதுத் தேர்தலுக்காக விடப்பட்ட புரளி
அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குப் பின்னர் எந்த நிமிடத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாடாளுமன்றம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது.
அதன் பின்பு தற்போதைய எம்பிக்களின் ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகின்றது. எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்கு இந்தப் புரளியை பயன்படுத்துவார்கள்.
தற்போது மு.கா அம்பாரையில் களை இழந்துள்ளது. இப்படிப்பட்ட  நிலையில் ஏதாவது ஒரு புரளியை எடுத்து விட வேண்டிய தேவை மு.கா வுக்கு உள்ளது.
அதனால்தான் இப்போது இந்த முஸ்லிம் மாவட்டம் என்கின்ற வித்தையைக் கிழப்பி விட்டுள்ளார்கள். இந்த வித்தையினால் அம்பாறை   மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையுள்ளது.
அதனால் இந்த வித்தையை தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.விரும்பவும் கூடாது. இன்னும் இன்னும் தமிழ் மக்களின் அடிமடியில்தான் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவைக்கின்றார்கள்.
மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக தமிழ் மக்களின் நிலையுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அம்பாரையில் தமிழ் மக்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு முஸ்லிம் இராஜ்ஜியம் அமைக்கப் போகின்றார்களா அல்லது முஸ்லிம் ஈழம் அமைக்கப் போகின்றார்களா.என்ன வேசம் இது. என்ன கோசம் இது.
அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள  பொதுத் தேர்தலில் மு.கா வகையறாக்கள் மக்களிடம் வாக்கு வேட்டைக்காக வரும் போது எங்கே மு.கா சின் முதலமைச்சர் என்று மக்கள் கேட்டால் அது தனி மனிதனைக் கௌரவப்படுத்தும் பதவி அந்தப் பதவியினால் எதுவும் சாதிக்க முடியாது.
ஆனால் முஸ்லிம் மாவட்டம்தான் வேண்டும் என்று ஒரு வித்தையைக் காட்டவுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் சில அறிவிலிகள் நம்புவார்கள். இந்த வகையறாக்களதப் புதிய புரளி எடுத்து விடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளி விடுவதா?
தமிழ் மக்களின் போராட்டங்களிலும் குருதியிலும் கிடைக்கப்பெற்ற  சுகபோகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு நோகாமல் நொங்கு சாப்பிட்டுக் கொண்டு  அம்பாறையில் முஸ்லிம் இராஜ்ஜியம் அமைத்தால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளிவிடுவதா.
ஏற்கனவே அம்பாறையில் மட்டுமல்ல நாடு முழுவதும் தமிழ் மக்களையும் தமிழ் அரசியலையும் ஒரங்கட்டி ஒதுக்கி வருகின்ற மு.கா முஸ்லிம் மாவட்டம் அமைத்தால் தமிழ் மக்களின் கெதி அதோ கதிதான்.அம்பாறையில் மு.கா 3 எம்பிக்களைப் பெறுவதற்காக முஸ்லிம் மாவட்டம் என்ற பூச்சாண்டியை கிளப்பிட்டாங்கய்யா.
முஸ்லிம் மக்களையே ஏலம் போட்டு விற்கின்ற இந்த வியாபாரிகள் முஸ்லிம் மாவட்டத்திற்குள் சிறுபான்மையினமாக தமிழ் மக்களை மாற்றிவிட்டு  தமிழ் மக்களையும் விற்று விடுவார்கள்.
இந்த முஸ்லிம் மாவட்டத்திற்கு தமிழ் மக்களின் சார்பாகவோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவோ அல்லது வேறு எந்தத் தரப்புக்களோ எந்த விதமான ஆதரவும் அளிக்காது. இந்தப் புரளியை மக்கள் நம்பாதீர்கள்.
இது எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட நிலைதான்.முஸ்லிம் மாவட்டம் என்ற கோரிக்கை வந்தாலும் தமிழ் மக்களின் ஆசீர்வாத்துடன் பெறலாமேயொழிய சும்மா புதுப் புது வித்தைகளை எடுத்து விடக் கூடாது.கனவிலும் நடக்காத விடயம் இது. மக்களே நம்பாதீர்கள்.
தமிழர்கள் வாக்குகள்தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும்
சிங்கள மக்களை உசுப்பேற்றி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் மூன்றாவது முறையாக தான் ஜனாதிபதியாகலாம் என்று நினைக்கும் மஹிந்தர் இம்முறையும் தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியாக முடியாது  என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
காரணம் மஹிந்தருக்கும்.மைத்திரிக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் ஓரளவு சரிசமமாக கிடைத்தால் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு 51 வாக்குத் தேவைப்படும் அப்போது சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.விசேடமாக தமிழ் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கவுள்ளது.கூட்டமைப்பு தங்களது தீர்மானத்தை தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் வெளிப்படையாக யாருக்கு  வாக்களிப்பது என்பதை தெரிவிக்கமாட்டாது என்பதை தலைவர் சம்பந்தன் தெரிவித்து விட்டார்.
அது கூட்டமைப்பின் அரசியல் தந்திரோபாயம். யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றம் கோரியே வாக்களிப்பார்கள்.
முஸ்லிம்களும் ஆட்சி மாற்றம் வேண்டியும் ஆள்மாற்றம் வேண்டியும்தான் வாக்களிப்பார்கள்.ராமன் ஆண்டால் என்ன ராமணன் ஆண்டால் என்ன என்று சொல்லபட்டாலும் நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற நோக்கில் தமிழ் மக்கள் தங்களது தீர்ப்பை வழங்குவார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தேர்தலைப் புறக்கணித்து விட்டதனால்தான் மஹிந்தர் ஜனாதிபதியானார்.
இப்போதும் தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிக் வேண்டும் அல்லது கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று இம்முறையும் வாக்களிப்பைத் தவிர்க்க வேண்டும்.
ஆக ஜனாதிபதி எட்டி எட்டி உதைக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவைப்படுகினறது.இம்முறையும் சிறுபான்மை மக்கள்தான் ஜனாதிபதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஒட்டுமொத்த வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.
கிழக்கு மகாண சபையில் மாற்றம் வருமா?
கடந்த வாரம் கொழும்பிலும் அம்பாறை மாவட்டத்திலும் ஒரு வதந்தி பரவலாக உலாவந்தது.அ தாவது கிழக்கில் மு.கா. அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியை எற்படுத்தப் போகின்றதாம் என்று அந்தச் செய்தி எனக்கும் எட்டியது.
நாங்கள் அதை நம்பவில்லை. இருந்தும் அதில் ஏதும் உண்மையுள்ளதா என்று தமிழ்க் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்பியிடம் இதுகுறித்துக் கேட்டபோது சும்மா பேய்க்காட்டும் கதை அப்படியான எந்தவொரு தகவலும் எமக்குக் கிடைக்கவில்லையென்றார்.
ஊர்ப்பாஷையில் சொன்னால் வண்டில் விடுகின்றார்கள் என்றார். மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, மு.கா தமிழ் கூட்டமைப்புடன் இணைவதற்கான எந்தவொரு தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை என்றும் அது சும்மா எடுத்து விடப்பட்ட வதந்தி என்றும் மு.கா அரசை விட்டு வராது என்றும் தெரிவித்தார்.
விரைவில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் மு.கா வகையறாக்கள் மக்களிடம் வாக்கு வேட்டைக்காக வரும் போது எங்கே மு.கா சின் முதலமைச்சர் என்று மக்கள் கேட்டால் அது தனி மனிதனைக் கௌரவப் படுத்தும் பதவி.
அந்தப் பதவியினால் எதுவும் சாதிக்க முடியாது ஆனால் முஸ்லிம் மாவட்டம்தான் வேண்டும் என்று ஒரு வித்தையைக் காட்டவுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் சில அறிவிலிகள் நம்புவார்கள். இந்த வகையறாக்கள் வரும் போது நாரே தக்பீர் என்பார்கள் முஸ்லிம் மாவட்டம்  கிடைத்து விடும்.
காற்றில் பறப்போம்,மின்னலைப் பிடிப்போம்,கடலில் நடப்போம் என்பார்கள் இனிமேல் அந்தப் பருப்பு அம்பாறையில் வேகமாட்டாது என்கின்றார்கள் அம்பாறை முஸ்லிம் மக்கள்.
பிந்திய  இரகசியத் தகவல்களின்படி மு.கா. மஹிந்தருக்குத்தான் ஆதரவு என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு அன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ளது.
மு.கா அரசுக்கு ஆதரவளிப்பதன் நோக்கம் அதிலுள்ள இலாபக் கணக்கு மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி உண்மைத் தகவல்களுடன் ஆராய்வோம்.முதலில் மு.கா. மஹிந்தருக்குத்தான் ஆதரவு என்ற செய்தி உத்தியோகபூர்வமாக வெளிவரட்டும்.
-எம்.எம்.நிலாம்டீன்
lamuk@gmail.com
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila