கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பாக  முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்..
கிழக்கு மாகாணசபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாக தோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு,அக்கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எம். நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தனது முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரியகாலத்தில் செயற்படுவதற்குதான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளஎம். நஜீப் அப்துல் மஜீத் தானும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் இணைந்து ஜனாதிபதியுடன் மேலும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலின் பின் புதிய மத்திய அரசு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில்,‘கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமாற்றம்’ சம்பந்தமாக அச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பேச்சுவரர்த்தைகள் ஆரம்பிக்கப்டடிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அதன் செயலாளரும் எதிரெதிராக போட்டியிட்டு, இறுதியில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ள மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 
இரு தரப்பாக தேர்தலில் பிரிந்து செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதுடன், கட்சியின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு அதன் வலிமையும் அதிகரித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மூதூர் தேர்தல் தொகுதி அமைப்பாளருமாகிய நான், 2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலின் பின் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான, பொதுஜன ஐக்கிய முன்னணியின் கிழக்கு மாகாண சபை ஆட்சியில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டேன்.
மத்திய அரசாங்கத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பங்காளியாக அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மிகுதி இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் முதலமைச்சர் பதவி வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டு, முதலில் நான் முதலமைச்சராக்கப்பட்டேன்.  எனது இந்த இரண்டரை வருட நியமன காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களே எஞ்சியிருக்கின்றன. மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரியகாலத்தில் செயற்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.
நமது இன்றைய ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏனைய கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மிக நேர்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன் செய்து கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இவ்வாறான ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது சம்பந்தமாக ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு, புதிய இந்த நெருக்கடிகள் தடையாக இருக்கின்ற காரணத்தினால், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்ற வகையிலும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் என்ற வகையிலும் இவ்விடயத்தில் தங்களது தலையீட்டைக் கோருகிறேன்.
கிழக்கு மாகாணசபையின் புதிய நெருக்கடி சம்பந்தமாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தெரியப்படுத்துமாறும் இவ்விடயம் சம்பந்தமாக நீங்களும் நானும் ஜனாதிபதி அவர்களை சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் தாங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila