பாராளுமன்றத் தேர்தலில் அனந்தியை ஓரங்கட்டும் முயற்சியே இடைநிறுத்தல் விவகாரம்!

திருமதி. அனந்தி சசிதரன் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பைத் தமிழரசுக்கட்சி அவருக்கு வழங்கக்கூடாது என்றும், அப்படி வழங்கினால் தமிழ்த்தேசிய உரிமைகளைப் பாராளுமன்றில் அனந்தி வாதிடுவது மட்டுமல்ல அவருக்குக் கிடைக்கும் பெருமளவு வாக்குகள், இன அழிப்பு, போர்க்குற்றம், காணாமற்போனோர் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய அவரின் கருத்துநிலையை முன்னெடுப்பதற்கு மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையாக விளங்கிக்கொள்ளப்பட்டுவிடும் என்றும், இது எதிர்காலத்தில் தமக்குப் பெரிய தலையிடியைக் கொடுப்பதாகிவிடும் என்றும் அஞ்சும் திரு. சுமந்திரன் அவர்களின் நெருக்கடி காரணமாகவே தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட செயலாளர் இடைநிறுத்தக் கடிதத்தை அனந்திக்கு அனுப்பியதாக தகவலறிந்த தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை தன்மீதான இடைநிறுத்தற் கடிதத்துக்கு அனந்தி சசிதரன் தனது நிலைப்பாட்டை விளக்கி பதில் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனந்தி சசிதரன் காட்டமான ஒரு பதிலை அனுப்பியிருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை உறுதிப்படுத்துவதற்கு அவரை ஊடகவியலாளர்கள் அணுகியபோது, தான் கடிதம் அனுப்பியதை உறுதிப்படுத்திய அவர், அதன் உள்ளடக்கத்தை வெளியிட மறுத்துவிட்டார். எனினும் தனது நிலைப்பாட்டுக்கான நியாயத்தையும், சில அடிப்படை அறங்கள் சார்ந்த கேள்விகளையும் தான் முன்வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் கடிதம் கிடைக்கப்பெற முன்னரே அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தமிழரசுக்கட்சியின் உள்வட்டாரங்கள் மிகுந்த அதிருப்தியை வெளியிட்டிருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரவிக்கின்றன.

 இதேவேளை, சுமந்திரன் தன்னை யாழ்ப்பாணத்தின் ஒரு தொகுதியில் தேர்தல் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தெரிவாக்கவேண்டும் என்ற வேலைத்திட்டத்தை முன்வைத்து தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கிறார். யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்களிடமும் இதற்கான ஆதரவை நாடியிருக்கிறார்.

 புதிய சிறிலங்கா அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவில் ஒரு நிரந்தரமான அமைச்சு பதவியைத் தனதாக்கவேண்டுமாயின் தேர்தல் மூலமோ, தேர்தல் இன்றியோ சுமந்திரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலையைத் தக்கவைத்தாகவேண்டும். ஏனெனில்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே அமைச்சரவைக்குள் தெரிவாக முடியும்.

 இதேவேளை பிரபலமான கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் தனது விருப்புக்கு மாறாக சுமந்திரனுக்கு ஆதரவு வழங்கவேண்டிய நிலையில் இருப்பதாக தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாயிருக்கும் சிலருக்குத் தன்னிலை விளக்கம் ஒன்றை அண்மையில் வாய்மூலமாகக் கொடுத்திருக்கிறார். அதேசமயம், அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தேசிய நிலைப்பாட்டின் பேரிலோ அன்றேல் ஜனநாயக விழுமியத்தைக் காக்கும் பேரிலோ இந்தத் தமிழரசுக்கட்சி அரசியல்வாதி குரல் கொடுக்கத் தவறியிருப்பதாக அவரோடு விவாதித்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

 அனந்தி இடைநிறுத்தல் விவகாரத்தில் குரல் கொடுக்கத் தவறுபவர்கள் யார் என்பதைத் தமிழ்த் தேசியத்தின் பால் நிற்போர் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு மூத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila