கடந்த மே மாதம் முதலாம் திகதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற மே தினப் பேரணி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மே தினப் பேரெழுச்சி இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குப் பின்னடைவு என்பது பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பதிவாக உள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மே தின எழுச்சிப் பேரணி நல்லாட்சிக்கு ஒரு பலத்த அடியாக இருந்த போதிலும் அது பற்றி எந்தக் கருத்தையும் ஆளுந்தரப்பினர் தெரிவிக்காமல், மெளனம் சாதிக்கின்றனர்.
இலங்கையின் அரசாட்சியைப் பொறுத்த வரை ஒருமுறை ஐக்கிய தேசியக் கட்சி எனில் மறுமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது தான் நடைமுறை.
எனவே நல்லாட்சி மாறி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மீண்டும் வந்தால், அதுபற்றிய அதிர்வுகள் தென்பகுதியில் இல்லை எனலாம்.
ஆக, இப்போது ஆட்சி மாற்றம் என்ற விடயம் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கே தலையிடியை - அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
தமிழ் மக்களின் வாக்குகளே மைத்திரியை ஜனாதிபதியாக்கியது என்ற உண்மையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்கு அறிவார். தமிழ் மக்கள் தம்மைப் பழிதீர்த்து விட்ட னர் என கருத்துரைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், மகிந்த ராஜபக்சவின் மே தின எழுச்சி தொடர்பில் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
உண்மையில் மகிந்த ராஜபக்சவின் மே தின எழுச்சி தொடர்பில் நல்லாட்சியினரின் எதிர்கால வியூகம் குறித்து நாம் ஆராய்வதை விட,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னவாக அமையும் என்பதே இப்போதைய கேள்வி.
அதாவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆண்டு கால அவகாசம் என்பது நல்லாட்சியின் ஆட்சி காலத்தின் முடிவாக அமையும்.
இந்த இரண்டு ஆண்டு கால அவகாசத்துக்குள் நல்லாட்சி எதனையும் செய்யாத நிலையில் பொதுத் தேர்தலும் வருமாக இருந்தால், அது நிலைமையை அடியோடு மாற்றிவிடலாம்.
இது தமிழ் மக்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும்.
எனவே மகிந்த ராஜபக்வின் மே தின எழுச்சி குறித்து மிகக் கூடுதலாகச் சிந்திக் வேண்டியவர்கள் தமிழ் அரசியல் தலைமையாகவே இருக்க வேண்டும்.
எனினும் மகிந்த ராஜபக்சவின் மே தின எழுச்சி நல்லாட்சிக்கு பாதகமானதேயன்றி நமக்கில்லை என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நினைப்பு தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு அழிவைத் தரும் என்பதால், உடனடியாக சர்வதேச சமூகத்தினதும் அண்டை நாடான இந்தியாவினதும் ஒத்துழைப்போடு இனப்பிரச்சினைக்கான தீர்வை அவசர அவசரமாக ஏற்படுத்த வேண்டும்.
நல்லாட்சியுடன் சேர்ந்து இதைச் செய்விப்பதில் தமிழ் மக்களின் வெற்றி தங்கியுள்ளது.