ஆனால் நாம் வரலாற்றுத் தவறிழைக்க முடியுமா நடராஜா குருபரன்:-
ராஜபக்ஸ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் அரை நூற்றாண்டு கால இனவாத மழை நின்று சனநாயக வானம் தெளிவடையத் தொடங்கியுள்ளதா? இக்கேள்வியை மறக்கக்கூடாத குறிப்புகளுக்குள் குறித்துவைப்போம். தேர்தல் முடிந்த சில நாட்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இம் மாற்றங்கள் நிலையான மாற்றங்களுக்கு வழி வகுக்குமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த உடனடி மாற்றங்கள் சில...
· அனைத்து ஊடகங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டு விட்டது. இலங்கையில் அனைத்து ஊடகங்களையும் பார்வையிடலாம்.
· * ராஜபக்ஸ ஆட்சியில் உயிருக்கு அஞ்சி வெளியேறிய ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் என அனைவரையும் நாடு திரும்பலாம் என மைத்திரி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
· * வடக்கில் இராணுவ ஆளுநர் நீக்கப்பட்டு ஓய்வுபெற்ற ராஜதந்திரி நியமிக்கப்பட்டு உள்ளார். (இவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன்றன.)
· * கூட்டமைப்பின் தலைமையுடன் மைத்திரி அரசாங்கம் உடனடியாக செய்யக் கூடியது – பாராளுமன்ற தேர்தலின் பின் செய்யக் கூடியது எனச் சில உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
· * சிறுபான்மை இனத்தலைவர்களான மனோகணேசன் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரை உள்ளடக்கிய உயர் மட்டத் தேசிய சபையை அரசாங்கம் நியமித்துள்ளது.
· * வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்வதற்கான தடை பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
இவை கொள்கை அளவிலானவை. 100 நாள் வேலைத் திட்டம் என அவர்கள் அறிவித்தவற்றுக்குள் அடங்குபவை. புதிய ஆட்சி பொறுப்பெடுத்து மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பாராளுமன்ற தேர்தலின் பின் நாட்டின் பிரதான பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்றும் கொள்கை அளவில் இணங்கியிருக்கிறார்கள்.
இக்கணத்தில் புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் இலங்கையில் ஈழத்தில் களத்தில் வாழும் மக்களின் மன நிலை ஓட்டங்களை, சூழலைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவர்களுக்கான கருத்துக்களை உருவாக்கி முடிவுகளையும் திணிக்க முயல்கிறோம். ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் அரசியற் பதட்ட நிலையிலேயே வாழவேண்டும் என்ற தேவை புலம் பெயர்ந்த பலருக்கும் இருப்பதாக உணர்கிறேன்.
மைத்திரியின் ஆட்சி வந்து அமைதி தொடர்ந்தால் அரசியல் தஞ்சம் கோரி இதுவரை தஞ்சம் கிடைக்காத ஆயிரக்கணக்காணவர்களை மேற்கு நாடுகள் திருப்பி அனுப்பப் போகின்றன எனச் சிலர் கூறுகிறார்கள். உண்மை தான் தற்போதைய இலங்கையின் அரசியல் மாற்றம் அரசியல் தஞ்சம் கோரியவர்களின் நிலையில் பாரிய கேள்விகளை எழுப்பும் என்பதும் அவர்களை திருப்பி அனுப்புவதற்கு மேலைநாடுகள் முனையும் என்பதிலும் சந்தேகம் இல்லை. 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்த சமாதான காலத்தில் பிரித்தானியா இலங்கையை அமைதி நிலவும் நாடுகளின் வெள்ளை பட்டியலில் சேர்த்ததனால் பலர் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.
ஆயிரக் கணக்கான தமிழ் மக்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பார்கள் என்பதற்காக, இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்வில் பதட்டநிலை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என நினைப்பதும் என்னவிதமான மானுட உணர்வு.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு அல்லது அதற்கான ஆரம்பம் உருவாகினால் அதனை வரவேற்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. அரசியல் தஞ்சம் கோரியோர் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் எந்த விதமான துன்புறுத்தலுக்கும் உள்ளாகாது தமது வாழ்வை இலங்கையில் தொடர்வதற்கான உத்தரவாதங்களை தமிழ் மக்களின் அரசியற்தீர்வுப்பொதியுள் உள்ளடக்க வேண்டியது அவசியம்.
அடையாளமற்றவர்களாகவும் நாடற்றவர்களாகவும் வாழ்வதில் உள்ள பிரச்சனைகளையும் துயரங்களையும் உணர்ந்தவர்கள் அரசியல் ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாடு திரும்பத் தயங்க மாட்டார்கள்.
பல இணையங்களுக்கு (ஊடகங்களுக்கு) ராஜபக்ஸ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் அரசியல் பரபரப்பற்றதாக மாறிவிட்டது. பரபரப்பு திகில் மற்றும் சுவாரஸ்யம் இல்லாத செய்திகளை மக்கள் பார்ப்பதில்லை (no clicks ) என அவை கவலை கொண்டுள்ளன. மக்கள் இணையங்களை, பத்திரிகைகளை தொலைக்காட்சிகளைப் பார்ப்பதனை, வானொலிகளைக் கேட்பதனை நிறுத்திவிடுவார்கள் என அவர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.
சில இணைய ஊடகங்கள் தமது கவலையைப்போக்க இப்போழுது ராஜபக்ஸ குடும்பத்தின் குப்பைகளைக் கிளறி முகர்ந்து பார்க்கத் தொடங்கி விட்டன. சிராந்திக்கும் - மகிந்தவுக்கும் இடையில் பிரச்சனை எனச் செய்திகள் வெளியிடுகின்றன. நாமல், யோசித, றோகித ஆகியோர் பெண்களுடன் சல்லாபிக்கும் படங்களை ஒவ்வாரு கோணத்தில் வெளியிடுகின்றன. கோத்தாபய , பசில் , சமல் உள்ளிட்டவர்கள் பற்றி கற்பனை செய்து செய்திகளைப் பிரசுரித்துக் கொண்டு இருக்கின்றன. ஒரு வகையில் இதுவும் நல்லதுதான் இவர்கள் இத்தகைய செய்திகளில் மட்டும் மினக்கெடுவது நல்லது.
ஏனேனில் வடக்கு கிழக்கில் அமைதியினை ஏற்படுத்தும், இனப்பிரச்சனைக்கான தீர்வினை நோக்கி நகரும் பேச்சுவார்த்தைகளைக் குலைக்கும் செய்திகளை ஊடகங்களிலோ சமூக வலைத்தளங்களிலோ இவர்கள் வெளியிடாமல் இருந்தால் சரி.
என்னை தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் கேட்டார் பிரச்சனை தீர்ந்தால் இலங்கையில் அமைதி ஏற்பட்டால் உங்களுக்கு இனிச் செய்திகள் இல்லையே. இனி உங்களுக்கு ஊடகச் செயற்பாடுகள் இல்லையே. வியாபாரம் இல்லையே. என்ன செய்யப் போகிறீர்கள் ?
ஊடகம் எனக்கு இலாபம் ஈட்டும் தொழிலாக இல்லை. மேலும் திறந்த சந்தைப்பொருளாதாரச் சூழலிற்றான் ஊடகம் இயங்க வேண்டி இருக்கிறது. மக்கள் அதிகம் பார்க்கும் இணையங்களில் வியாபார நிறுவனங்கள் விளம்பரம் செய்ய முயற்சிக்கின்றன. இது ஊடகத்திற்கான வருமானமாக அமைகிறது. ஆனால் செய்திகளை விற்பனைப்பண்டங்களாக நான் கருதுவதில்லை. அதனாற்றான் மக்களுக்கு கிளுகிளுப்பையோ மாயையோ தரும் வகையில் செய்திகளை வெளியிடுவதில்லை. செய்திகளைச் செய்திகளாகவே வழங்கும் ஊடக தர்மத்தைக் கடைப்பிடிக்கிறேன்.
மக்களைப் பணயம் வைத்து அவர்களின் துயரங்களை இழப்புகளை வைத்து நான் ஊடக வியாபாரம் செய்வதில்லை. யுத்தத்தையும், போராட்டத்தையும் தமிழ் மக்களின் அவலங்கைளையும் பதட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் - ராஜபக்ஸ குடும்பத்தையும் மையப் படுத்தி மட்டுமே ஊடகம் செய்யமுடியும் என்றால் அவருக்கு ஊடகவியல் தெரியாதென்றே அர்த்தம்.
இனப்பிரச்சனை இல்லாத அல்லது இனப்பிரச்சனை வெளிக்கிளம்பாத அல்லது இனப்பிரச்சனை அமுங்கி நிகழ்கிற நாடுகளில் ஊடகங்கள் இல்லையா என்ன? உலகம் அதிகார வர்க்கமாகவும் ஒடுக்கப்படுபவர்களாகவும் பிரிந்து இருக்கும் வரையில் ஊடகவியலாளனுக்கு வேலை இருக்கும்.
இன்று மக்களை அதிகம் கவரும் செய்திகள் என்று சில உருவாக்கப்பட்டுள்ளன.
· * விடுதலைப் புலிகள் அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் மூத்த தளபதிகள் பற்றிய செய்திகள் அல்லது இவர்களின் பெயர்கள் வரக்கூடிய வகையில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்
· * ராஜபக்ஸ குடும்பம் தொடர்பான செய்திகள் (மகிந்த, கோத்தாபய, பசில், நாமல் யோசித, றோகித சிராந்தி தொடர்பான செய்திகள்)
ஆனால் இந்தச் செய்திகளின் அரசியல் மற்றும் சமூகப்பெறுமானம் குறித்து எவரும் சிந்திப்பதில்லை.
இந்த நிலை தொடர வேண்டுமா? சிந்தியுங்கள்.
இணையத்தைத் திறந்தால் பரபரப்பு விறுவிறுப்பு திகில் பாலியல் கிளுகிளுப்பு நிறைந்த செய்திகளும் படங்களும் இல்லையே என ஏங்கும் வாசகர்களும் தமது நுகர்வு குறித்து மீள்பார்வை செய்ய வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு அமைப்புகளுக்கு, மனித உரிமைகள் அமைப்புகளுக்கு இனி என்ன வேலை? இலங்கையில் அமைதி ஏற்பட்டால் தங்களுக்கு வேலையில்லையே எனச் சிலர் ஏங்குகின்றனர்.
இலங்கையில் அரசியல் பதட்டம் இருந்தால்தான் வேலை செய்யலாம் என்று யார் சொன்னது. அமைதி ஏற்பட்டால்தான் வேலை செய்ய நிறையச் சாத்தியங்கள் உருவாகும்.
யுத்தம் முடிந்து ஈழம் கிடைத்தால் அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள் எனச் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில்: “ மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளைக் கவனிப்பேன். விழுப்புண் அடைந்த, காயப்பட்ட அங்கவீனமான முன்னாட் போராளிகளை பராமரிக்கும் பணியினை செய்வேன்” என்றாராம். இங்கே புலிகளை அவர்களின் தலைமையை விமர்சிப்பவர்கள் அவர் உண்மையிலும் அப்படிச் செய்திருக்கக்கூடுமோ எனக் கேள்வி எழுப்பக்கூடும் அதுவல்ல முக்கியம் அமைதிச் சூழல் ஒன்றில் எதனைச் செய்ய வேண்டும் என அவர் சொன்ன விடயம் முக்கியமானது.
அமைதியான தீர்வு ஒன்று எட்டப்படுமானால் போரினால் அழிவுண்டு இருக்கும் தமிழர் தேசத்தைப் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக கட்டி எழுப்பும் பணிகளை, போரினால் எல்லாவற்றையும் இழந்து இருப்பவர்களை ஆற்றுப்படுத்தி மீண்டும் அவர்களை நிமிர்த்தி விடுகின்ற பணிகளை இந்தப் புலம்பெயர் அமைப்புகள் பொறுப்பேற்கலாம்.
ஐக்கியநாடுகள் அமைப்பின் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை குறித்த அழுத்தங்களைக் கூட இலங்கைக்குள் உருவாக்கக் கூடிய சனநாயக் ரீதியான வெளியுள் இருந்து வழங்க முயற்சிக்கலாம்.
பிரித்தானியா உள்ளிட்டசில நாடுகள் புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி உள்ளன. அந்த வகையில் அமைதிக்கான முயற்சிகள் தொடரும் வேளையில் இனப்படு கொலைகளுக்கான நியாயமான சர்வதேச விசாரணையையும் வலியுறுத்துகின்ற அழுத்தங்களை தொடர ச் சாத்தியங்கள் தோன்றலாம்.
ஆக இந்தப் பதிவின் நோக்கம் அதீத நம்பிக்கைகளையோ மாயைகளையோ உருவாக்குவதல்ல. நிகழ்காலப் போக்கை சரியாகக் கணிப்பிட்டு அரசியல் ராஜதந்திர முறைகளில் பிரச்சனைகளை அணுக வேண்டும் என்பதாகும்.
தமிழர்களின் மூன்றாவது சந்ததியும் முரண்பாட்டுக்குள் சிக்கி அழிவது நல்லதல்ல. எதிர் கொள்ளும் இனப்பிரச்சனைக்கு அனைத்து தரப்பும் இணைந்து சாத்தியமான தீர்வைக் கொண்டு வரவேண்டும். தத்துவங்கள் பேசுவதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை செயல்வடிவம் பெற வேண்டும்.
தனி நபர்களும் அமைப்புகளும் தமது சொந்த இலாபத்துக்காக அரை நூற்றாண்டாக அல்லல்படும் தமிழ் மக்களை வைத்து ஊடக வியாபாரத்தையோ அரசியலையோ செய்ய இக்கணத்தில் முயன்றால் அது வரலாற்றுத்தவறாகும்.