மைத்திரி பால சிரிசேனவின் 100 நாள் ஆட்சித் திட்டத்தில் வடக்கில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தோற்றுப்போன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தரப்பினர் மேற்கொள்ளலாம் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் குண்டு வெடிப்புகளை மேற்கொண்டோ? அல்லது ரோந்து செல்லும் படையினர் மீது தாக்குதல் நடத்தியோ மைத்திரியின் ஆட்சியில் மீண்டும் புலிகள் உயிர்த்தெழுந்து விட்டார்கள் என்ற நிலையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு முக்கிய தரப்பொன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் புலனாய்வு மட்டத்தில் இருந்த சிலரும், முக்கிய பொறுப்புக்களில் இருந்த சிலரும், யுத்தத்தின் இறுதியில் புலம்பெயர் பரப்பில் முக்கியஸ்த்தர்களாக இருந்த சிலரும் பாதுகாப்பு செயலர் மற்றும் அவருக்கு நெருக்கமான புலனாய்வுத் தரப்பினரோடு இன்னும் தொடர்பில் இருக்கின்றனர்.
அது மட்டும் அல்லாது மாற்று தமிழ் இயக்கங்களில் இருந்து பின்னர் அவர்களின் கட்டுப்பாடுகளும் இல்லாமல் புலனாய்வுத் துறையினரோடு நெருக்கமாக இருந்தவர்களும் கோத்தாபய ரெஜிமண்ட்டுடன் நெருக்கத்தை பேணி வருகின்றனர். இவர்களை வைத்தே நாடு முழுவதிலுமான கடத்தல்கள் கொலைகள் பலவற்றை கோத்தாபய படையணி மேற்கொண்டது...
தவிரவும் தெற்கில் கோலோச்சிய பாதாள உலகக் குழுவினரும் மகிந்த சகோதரர்களுடன் நெருக்கத்தை பேணியவர்கள்...
இவ்வாறன ஒரு தரப்புடன் இணைந்து வடக்கில் சில தாக்குதல்களை எதிர்வரும் 100 நாட்களுக்குள் நடத்துவதன் மூலம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றியினை சிங்கள மக்கள் மத்தியில் பெறலாம்... பாராளுமன்ற ஆசனங்களை தம்வசமாக்குவதன் மூலம் அதிகாரமுள்ள பிரதம மந்திரியாக ஆட்சிப் பீடம் ஏறலாம் என்ற நிலைப்பாட்டை மகிந்த தரப்பினர் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது...
இந்த மகிந்த சகோதரப் பொறியில் இருந்து மைத்திரி – றணில் அரசாங்கம் தப்பிப் பிழைக்குமா?