காணாமல் போனோர் தொடர்பில் பாப்பரசர் கவனத்தில் எடுக்க வேண்டும் என கோரி வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (13.1) மாலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் கலந்து கொண்டு அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது அவர்கள் திருத்தந்தையே அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள் எங்கள் இன விடுதலைக்கு ஆசீர்வதியுங்கள், திருத்தந்தையே எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகார நீதியை பெற்றுத்தாருங்கள், திருத்தந்தையே அடிமைத்தமிழ் மக்களுக்கு சிங்களஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலையை பெற்றுத்தாருங்கள், அதி வணக்கத்திற்குரிய திருத்தந்தையே தடுப்பு காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள், திருத்தந்தையே உங்கள் பாதம் பதியும் இடம் புனிதமாக இருக்க வேண்டும். அங்கு இனப்படுகொலையும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளது, கடத்தப்பட்டு காணாமலல்போன பிள்ளைகளை தேடி அலைகின்றோம் எங்களுக்கு ஆறுதல் தாருங்கள் தந்தையே, இறுதிப்போரில் னாணாமல் போன எங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் கேள்வி எழுப்புங்கள் என பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் மடு திருத்தலத்திற்கான தமது பயணத்தை மேற்கொண்டனர்.