ஒற்றையாட்சியால் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாது: அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கம்

sodhylingam

இலங்கையில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சனைக்கு தீர்வினை ஒற்றையாட்சி முறையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியாது என பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.சோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆதவன் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுவரும் அரசியல் அமைப்பு தொடர்பிலும் அது தமிழர் அரசியலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் கேட்கப்பட்ட போது, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உருவாக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியலமைப்பானது தற்போதைய அரசாங்கம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறை மாற்றியமைக்கப்படும் என்ற கோஷத்தை முன்வைத்தே தேர்தல்களை சந்தித்திருந்தது. அதேபோன்று தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்கி சர்வதேச அழுத்தங்களை கையாள்கின்றது.
அந்தவகையில் புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு மூன்று பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
1. நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு
2. தேர்தல் முறை மாற்றம்
3. அரசியல் தீர்வு
முதலாவதாக நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதானது சர்வாதிகாரப்பாங்கில் தனியொருவரிடம் குவிந்து கிடக்கின்ற அதிகாரங்கள் நீக்கப்பட்டு அவை மக்கள் சபையான நாடாளுமன்றத்திடம் பாரப்படுத்தப்படப் போகின்றது. தேசிய ரீதியில் இது ஓர் சிறந்த ஜனநாயகத் தன்மையாக பார்க்கப்பட்டாலும் தமிழ் மக்களை அல்லது ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களை பொறுத்தவரையில் இரசிக்கக் கூடிய விடயமல்ல.
நிறைவேற்று அதிகார முறை என்பது தமிழ் மக்களுக்கு பெரிதாக எதையும் பெற்றுத்தரவில்லை. அல்லது தமிழர் தரப்புக்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை என்ற விமர்சனம் இருக்கின்ற போதிலும் ஜனாதிபதி தேர்தல்களை மையமாகக் கொண்டு சிறுபான்மை தேசிய இனங்கள் பேரம் பேசும் வாய்ப்புக்கள் இருந்ததை மறுப்பதற்கில்லை.
இதனை இலங்கை தமிழர் அரசியல் சரியாக பயன்படுத்தாவிட்டாலும் சகோதர தேசிய இனங்களான மலையக மக்களின் தலைவராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களும் அதேபோல் முஸ்லிம் மக்களின் தேசிய தலைவராக போற்றப்படுகின்ற அமரர் அஷ்ரப் அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
அடுத்ததாக தேர்தல் முறையை பொறுத்தரையில், தற்போது இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறையின் மூலம் சிறுபான்மை தேசிய இனக் கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலைமையே காணப்படுகின்றது. அதனால் பேரம் பேசும் சந்தரப்பம் அதிகம் காணப்பட்டது. தொகுதிவாரி தேர்தல் முறை மாற்றப்படுமாக இருந்தால் அந்த வாய்ப்பு குறைவடைவதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றது.
அதைவிட மலையக மக்களும் முஸ்லிம் மக்களும் தமது பிரதிநிதித்துவத்தை பாரியளவில் இழக்க வேண்டி ஏற்படும். தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்பது மலையக மக்களுக்கான பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். தொகுதிவாரி தேர்தல் முறை மாற்றப்படுமாக இருந்தால் தற்போதைய நிலையில் நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மட்டுமே மலையக மக்களின் பிரதிநிதி ஒருவரால் வெற்றிபெற முடியும்.
கண்டி, பதுளை, கொழும்பு போன்ற பகுதிகளில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் என்பது சவாலானதொன்றாகவே மாற்றமடையும். அதேபோன்று முஸ்லிம் மக்களை எடுத்துக் கொண்டால் வன்னி, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் வீழ்ச்சியை சந்திக்க வேண்டிவரும். இது தொடர்பில் மேற்குறித்த இரு தரப்புக்களும் பல்வேறு பேச்சுக்களை அரசாங்கத்துடன் நடாத்துவதாகவும் ‘இரட்டை பிரதிநிதித்துவ முறை’, ‘கலப்பு தேர்தல் முறை’ போன்றவற்றின் ஊடாக ஈடுசெய்ய முயற்சிக்கின்ற போதும் அது எந்தளவிற்கு நடைமுறையில் வெற்றியளிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.
இவ்விடயத்தில் வடக்கு, கிழக்கு அரசியல் தலைமைகள் மத்தியில் ஒரு மெத்தனப் போக்கு காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு பகுதியில் தமக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நினைப்பில் அவர்கள் இருப்பது புலப்படுகின்றது.
ஆனால், வவுனியா பகுதியிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்களை மையமாகக் கொண்டு தொகுதி எல்லை நிர்ணம் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் வடக்கு கிழக்கிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சியை அல்லது சவால்களை எதிர்க்கொள்ள வேண்டிவரும் என்ற யதார்த்தத்தை புரிந்துக் கொண்டு சம்பந்தப்பட்ட தலைமைகள் விடயத்தைக் கையாள வேண்டும்.
ஆகமொத்தத்தில் புதிய அரசயிலமைப்பில் உள்வாங்கப்படவுள்ள ‘நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கம்’, ‘புதிய தேர்தல் முறை’ இரண்டுமே தமிழர்கள் உட்பட சிறுபான்மை தேசிய இனங்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கப் போவதில்லை.
இருப்பினும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படப் போகின்றது என்ற பிரசாரங்களும் அது தொடர்பிலான நம்பிக்கையூட்டும் பரபரப்புக்களும் மேற்குறித்த இரு விடயங்களிலும் உள்ள எதிர்விளைவுகளை பொருட்படுத்தாத நிலைமையை ஏற்படுத்தி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்காக அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்றும் சொல்ல முடியாது. தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவருமே புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்படாது என்பதை சொல்லி வருகிறார்கள். ஒற்றையாட்சி முறை நீக்கப்படாத எந்தவொரு அரசியலமைப்பும் தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யாது.
ஒற்றையாட்சி என்பது இன்று நேற்று அல்ல. கோல்புறூக் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போதே ஒற்றையாட்சி முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் பின்னர் டொனமூர், சோல்பரி, 72ஆம் ஆண்டு அரசியலமைப்பு, 78ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆகியவற்றின் ஊடாக மெருகேற்றப்பட்டு வந்தது என்பது தான் உண்மை.
சோல்பரி அரசியலமைப்பில் 29ஆவது உருப்புரையில் சிறுபான்மை இனங்கள், மதங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையாகன எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளலாகாது என்ற விடயம் உள்ளடக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறையில் சிறுபான்மையினரை பாதுகாக்கவில்லை. சுதந்திரத்தின் பின்னர் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோதும் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் நீதிக் கிடைக்காத நிலையில் சிறுபான்மை சமூகங்கள், பிரித்தானியாவின் பிரிவிக் கவுன்சிலில் மேன்முறையீடு செய்திருந்தன. ஆனால் அவை எவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் தேடி தரவில்லை. மாறாக ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் அதிகாரங்களை பிடித:து வைத்திருந்த மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு இருந்தன.
இவ்வாறான வரலாற்று பின்னணியில், தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்களது அரசியல் அபிலாஷைகள் தீரக்கப்பட வேண்டுமானால் நிரந்தர அதிகார அலகு, சுயநிர்ணய உரிமை ஆகியன ஏற்கப்பட்ட அதிகார பகிரல் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், தற்போதைய அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியலமைப்பை உருவாக்கி சர்வதேசத்தை சமரசம் செய்துக்கொள்ள தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவே தெரிகின்றது.
இதற்கிடையில் ‘ஒற்றையாட்சி’ என்ற பதத்திற்கு பதிலாக கடந்த 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ போன்ற வார்த்தை ஜாலங்களினூடாக சிறுபான்மை சமூகங்களை திருப்திப்படுத்த முயற்சிப்பதாகவும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை மெருகூட்டவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்ற போதிலும் எவையும் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. அதைவிட அரசியல் அமைப்பில் உள்ளவை எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டதாக வரலாறுகளும் இல்லை.
ஆகவே இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். தற்போது தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு சார்பான சர்வதேச அழுத்தங்கள் காணப்படுகின்றன. புலம்பெயர் சக்தி பலமாக இருக்கின்றது. இந்தியாவினுடைய ஒத்தாசை இருக்கின்றது (சரியாகப் பயன்படுத்தினால்). இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
“மாறாக அரசாங்கத்தை நம்புகிறோம்”, “விட்டுப் பிடிக்கிறோம்”, “சர்வதேச வேண்டுகோளுக்கு இணங்கி போகின்றோம்” என்று வாய்ச்சவடல் செய்துக் கொண்டிருந்தால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட இன்னொரு சந்தரப்பமாக, எதிர்க்கால சந்ததி வரலாற்றில் பதிந்து வைக்கும் என்பதை தற்போதைய தலைவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்”  என்று தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila