புதிய ஜனாதிபதியும், எதிர்கொள்ளவிருக்கும் சவால்களும்.!

விளையாட்டு வினையான விடயமே மஹிந்தவின் தேர்தல் அறிவிப்பு பதவியில் பேராசை கொண்டதன் விளைவு பெருந்தரித்திரத்தில் முடிந்த கதையாகிவிட்டது. மேலும் 6 வருடங்களில் கொண்ட ஆசை இருக்க வேண்டிய இரு வருடங்களைக் கூட தாரைவார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தி விட்டது.
எந்த விடயத்திற்கும் ஒரு எல்லையுண்டு ஆனால் முழுதையுமே முழுங்க நினைப்பவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நிலைமை நல்லதொரு உதாரணமும் படிப்பினையுமாகும் என்றே கூறலாம்.
முன்னாள் ஜனாதிபதி கனவிலும் நினைத்திராத விடயம்தான், தேர்தல் தோல்வி இது அவரது வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே கருதப்படுகின்றது.
அவர் நினைத்ததெல்லாம் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விகரமசிங்கதான் போட்டியிடுவார் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கில்லை, அவரது கட்சிக்குள்ளேயே பல பிரிவினைகள் இந்த நிலையில் அவர் கேட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்ற மஹிந்தவின் தப்புக் கணக்கு அவரை ஓரங்கட்டி விட்டது.
சினிமாப் படங்களில் கதாநாயகியை காப்பாற்ற வரும் வில்லன்போல் மைத்திரி என்ற வில்லன் அராஜகத்திலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற அவரின் கட்சியில் இருந்தே வந்தமை இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
மண் குதிரயை நம்பி ஆற்றில் இறங்கிய கதைமாதிரி மஹிந்தவின் அரசிலிருந்து அமைச்சர்கள் நாளாந்தம் மைத்திரியின் பக்கம் வந்து கொண்டிருப்பது மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் பாரியதொரு தலையிடியை மஹிந்தவுக்கு ஏற்படுத்திவிட்டது.
அராஜகத்திற்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரான மஹிந்த அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க மைத்திரிபால சிறிசேன என்ற மனிதர் அரசியல் திருப்பு முனைக்கும் அமைச்சர்கள் ஆளுங்கட்சியில் இருந்து பொது அணியின் பக்கம் சாய்வதற்கும் வழிகோலியது எனலாம்.
பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் ஜனவரி 08ல் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 51 சத வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்; பெற்று தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படதுடன் ஆட்சியையும் கைப்பற்றும் சந்தர்ப்பம் இலகுவாகக் கிட்டியது.
பல கட்சிகளின் பூரணமான ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கிய வெற்றியானது இலங்கை வாழ் சகல சமாதான விரும்பிகளினதும் ஆசீர்வாதத்துடன் வெற்றி பெற்றாலும் அவர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் தனது தலைமைத்துவத்தை கொண்டு செல்ல வேண்டிய விடயமும் உள்ளது.
புதிய ஜனாதிபதிக்கு பௌத்த மக்கள் வாக்களித்தாலும் அந்த வாக்கு வங்கிகளின் தொகையால் வெற்றி பெறமுடியாத நிலையே காணக் கூடியதாகவுள்ளது.
இருந்த போதிலும் இனவாதம் என்ற துன்பமான வரலாற்றில் இருந்து விடுபடும் வகையில் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்ற வகையில் வடகிழக்கு உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது பூரணமான பங்களிப்பே மைத்திரிபால சிறிசேனவை 51 சத வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற வழிவகுத்தது.
தமிழ் பேசும் மக்களே கடந்த காலங்களைப் போல் இம்முறையும் ஒரு பௌத்த தலைமையை ஆட்சியில் அமர்வதற்கு காரண புருசர்களாக இருக்கின்றார்கள் என்றால் அதனை அவர்களால் இலகுவில் மறந்துவிட முடியாது.
கடந்தகால அரசாங்கங்களை சிறுபான்மையினர் என்ற வகையில் குறிப்பாக முஸ்லிம்கள்தான் காப்பாற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன. எனினும் அவ்வாறு ஆட்சியை தக்கவைக்க உதவிய முஸ்லிம் சமுகத்தை அவர்கள் கருவேப்பிலைகள் போல் பயன்படுத்திய நிலைமைகளை முஸ்லிம் சமூகம் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளனர். இதற்கு அரசுடன் ஒட்டியிருந்த முஸ்லிம் தலைமைகளும் காரணகர்த்தாக்கள் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அனுபவ ரீதியாக உணர்ந்ததன் விளைவாக இன்று இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் நல்லாட்சி இடம் பெறவேண்டும் என்ற அனைவரதும் எதிர்பார்ப்புக்கள் எதிர்கால சுபீட்சமான இலங்கையை ஏற்படுத்தும் என்பதில்தான் உள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
முக்கியமாக பொருளாதாரத்தால் சூறையாடப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்புதல்,
யுத்தக் குற்றம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்கு பதில் சொல்லுதல்,
இனவாதத்தை இல்லாதொழித்தல்,
ஒன்று சேர்ந்துள்ள பல கட்சிகளை ஒன்றினைத்துச் செயல்படல்,
மனித உரிமை மீறல்களை சீர் செய்தல்,
ஊழல் மோசடிகளை கண்டறிந்து நீதியைப் பெற்றுக் கொள்ளல்,
நிதி மோசடிகளை கண்டறிதல்,
மரணித்துள்ள ஜனநாயகத்தை உயிர் பெறச் செய்தல்,
அரசியல் மோசடிகளை கண்டறிந்து நியாயம் பெற்றுக் கொடுத்தல்,
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்தல்,
முறையற்ற அரச நியமனங்கள் தொடர்பாக கண்டறிதல்,
பழிவாங்கப்பட்ட அரச, தனியார் ஊழியர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுத்தல்
என பட்டியல் இடலாம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் தீர்வினையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள நிலையான திட்டங்களை வரைதல் வேண்டும்.
இலங்கையின் இறைமைக்கு குந்தகமாக முக்கியமாக காணப்படுவது ஜெனீவா மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு கடந்த மஹிந்த அரசு அக்கறை செலுத்தாது இழுத்தடிப்புக்களை செய்து வந்ததால் இலங்கை விடயத்தில் சர்வதேம் கடுமையான சினங் கொண்டுள்ளதை ஊடகங்கள் வாயிலாகவும், ஏனைய நாடுகளின் அறிக்கைகள் வாயிலாகவும் காணக் கூடியதாகவுள்ளது.
மேற்படி பிரச்சினைக்கு இலங்கை சர்வதேசத்தை அமைதிப்படுத்தும் வகையிலும் இலங்கையைப் பாதிக்காத விதத்திலும் பதிலளிக்க தயாராக வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் இலங்கை உலக நாடுகளில் சுதந்திரமாக செயற்படுவதற்கு வழி கிடைக்கும்.
இதேபோல் புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கு கைகோர்த்த பின்னணியில் இருக்கும் சமூகங்களே தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களாகும். இவர்களின் பல தசாப்த கால இனப்பிரச்சினை உள்ளிட்ட மறுக்கப்பட்ட ஜனநாயக விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அவை மக்கள் விரும்பும் வகையில் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டே சிறுபான்மைச் சமூகங்கள் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களித்தனர். இந்த வகையில் ஜனாதிபதி இம்மக்கள் விடயத்தில் மனப்பூர்வமாக செயற்பட வேண்டியுள்ளது.
இதேபோல் இனவாதம் இந்த நாட்டில் இருந்து களையப்பட வேண்டும். அதற்காக ஒரு அதிகாரம் நிறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி அதன் மூலம் இனவாதம் பேசுபவர்கள் இனங்காணப்பட்டு சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் என்ற அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
கடந்த கால அரசின் ஆட்சியில் பழிவாங்கப்பட்ட சமூகங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் நீதி பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடும் புதிய அரசையே சாரும். இவ்வாறு நூற்றுக்கணக்கான விடயங்கள் தற்போது பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதியின் முன்னுள்ள பாரிய சவால்களாகும்.
இந்தச் சவால்களை ஜனாதிபதி மட்டும் தனித்து நின்று செய்ய முடியாது, அனைத்துப் பங்காளிக் கட்சிகளும் முன்னின்று செயல்படுவதன் மூலமே தேசிய அரசாங்கத்தின் இலக்கினை எட்ட முடியும் என்ற விடயம் இங்கு முக்கியமானதாகும்.
எந்த நோக்கத்தின் அடிப்படையில் தேர்தல் வெற்றி பெறப்பட்டதோ அந்த நோக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றும் வகையில் புதிய ஆட்சியாளர்கள் தமது வியூகங்களை வகுத்து பாரபட்சமற்ற விதத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டியதே தேசிய அரசாங்கத்திற்கு முன்னுள்ள பொறுப்புக்களாகும்.
எனவே இனியும் இலங்கை குடும்ப ஆட்சிக்கோ அல்லது அராஜக வழிகளுக்கோ செல்லாது மக்களை வெல்லும் மைத்திரி யுகமாக புதிய யுகம் மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila