இலங்கையில் தெற்கினை போன்று வட-கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரங்கள் குறைந்திருப்பதாக இல்லை. அத்துடன் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கை திரும்புவதற்கான சூழல் மேம்பட்டுவிட்டதாகவும் நம்பவில்லை எனவும் யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர்க் யாழ்.பொதுசனநூலகத்தில் வைத்து யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகளை சந்தித்தார்.
புதிய ஆட்சி மாற்றம் மற்றும் ஊடக நிலை என்பவை பற்றி அவர் ஊடக அமையப்பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வடகிழக்கை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகள் உள்ளிட்ட பலவற்றினை பற்றி ஊடக அமையப்பிரதிநிதிகள் விபரித்திருந்தனர்.
முன்னதாக யாழ்.பொதுசன நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களை அவர் பிரதம நூலகரிடம் கையளித்திருந்தார்.
காலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனுக்கும் அவருக்குமிடையில் சந்திப்பொன்று முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு சென்றுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இன்று காலை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். இன்று காலை 9.30 மணிக்கு வடக்கு முதல்வரைச் சந்தித்து கலந்துரையாடல்களை அவர் நடத்தியிருந்தார்.
தொடர்ந்து பிரித்தானிய அரசின் நிதியின் கீழான ஆங்கில கற்கை மையத்திற்கு சென்றிருந்த அவர் பிற்பகல் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள நலன்புரி முகாம் மக்களையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.