பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கூடிய விரைவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு மன்னார் ஆயார் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் நல்லிணக்கத்திற்கான முதல் நடவடிக்கையை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும், எனவே அந்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்திக்க அடுத்த மாதம் திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரியுள்ளார். பல முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாகவும், அதன் போது அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 400 முதல் 500 வரையிலான கைதிகள் பூசா, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம், அனுராதபுரம் போன்ற இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டோர் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து மைத்திரிபால ஆட்சியின் கீழ் நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.