பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் மேற்கொண்ட பொலிஸ் நிலையங்களின் 72 பொறுப்பதிகாரிகளின் இடமாற்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமாக இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் மா அதிபரை தவிர உப பொலிஸ் பரிசோதகர் உட்பட பொலிஸ் துறையின் அனைத்து நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை செய்யும் அதிகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது.
இந்த விடயத்தில் ஜனாதிபதியோ, பாதுகாப்புச் செயலாளர் உட்பட எவரும் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் ஜனாதிபதி தலையிட்டுள்ளமை, பாரதூரமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி, பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையீடுவதன் மூலம் ஜனாதிபதி மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கிலேயே பொலிஸ் ஆணைக்குழு இந்த இடமாற்றங்களை வழங்கியது.
இதற்கு அமைய 30 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது. எனினும் ஜனாதிபதியின் தலையீடு காரணமாக இடமாற்ற நடவடிக்கைக்கு தடையேற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா சட்டவிரோதமாக இடமாற்றம் செய்யப்பட்டார். பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு அந்த இடமாற்றத்தை இரத்துச் செய்தது.