புதுடில்லியில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியது என்ன? -அ.நிக்ஸன்

புதுடில்லியில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியது என்ன? -அ.நிக்ஸன்:-

பிரிபடாத இலங்கைக்குள் தீர்வு என்றால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொருள்கோடலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வற்புறுத்த வேண்டும். இல்லையேல் வடக்கு கிழக்கில் ஏதோ ஒரு வழியில் அமைதி ஏற்பட்டால் போதும் என்ற நிலைதான்; ஏற்படும்.  

13 ஆவது திருத்தச்சட்டம் இன்றி தீர்வு என்ற மங்களவின் கருத்துக்கு இந்தியாவும் இணக்கம்? இந்திய இலங்கை ஒப்பந்தம் மாத்திரமே புதுடில்லிக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது.

-அ.நிக்ஸன்-

இராணுவம் அபகரித்த காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் கையளிப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லியில் கூறியிருக்கின்றார். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டும். அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு உறுதியாக வேண்டும் என்ற எதிர்;ப்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்ப்பார்ப்;புக்கு உள்ளேதான் வடக்கு கிழக்கு மாகாண பிரச்சினைக்கும் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா கவனமாகவுள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

மூன்று விடயங்கள்

மங்கள சமரவீர புதுடில்லியில் மூன்று விடயங்களை கூறியிருக்கின்றார். ஒன்று 13ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தினாலும் அந்த சட்டத்தின் பிரகாரம் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டிய தேவை இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாவது இராணுவம் கைப்பற்றிய காணிகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் பிரச்சினை இல்லை என்றும் ஆனாலும் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் சிலவற்றை தொடர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தியுள்ளார். மூன்றாவது ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை குறைப்பது என்ற கருத்தையும் கூறியிருக்கின்றார். இந்த மூன்று விடயங்களையும் மங்கள சமரவீர புதுடில்லிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து உரையாடியபோது இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை மங்கள சமரவீர கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் மைத்திரிபால அரசாங்கம் எதிர்காலத்தில் எப்படி செயற்பட வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் மங்கள சமரவீரவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மங்கள சமரவீரவைப் பொறுத்தவரை இந்திய மத்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் இனப்பிரச்சினை திர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரும்புகின்ற ஒன்றையே இந்தியா ஏற்க வேண்டும் என்பதில் அவதானமாக இருந்தார் என இந்திய செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பேசியபோது காணி அபகரிப்பு விடயங்கள், இராணுவ எண்ணிக்கைகளை குறைத்தல், சிவில் நிர்வாக செயற்பாடுகளுக்கு இடமளித்தல், மற்றும் வடமாகாண சபையின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடமளித்தல் போன்ற விடயங்களுக்கு முக்கியமளித்திருக்கின்றார். அதற்கு சாதகமான பதில் வழங்கிய மங்கள சமரவீர அனைத்துக் கட்சிகளின் இணக்கத்துடன் குறித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கின்றார். அதேவேளை படிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்தும் சுஸ்மா சுவராஜ் யோசனை முன்வைத்திருக்கின்றார்.

இங்கு நரேந்திரமோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் மேலும் இரண்டு விடயங்களை பிரதானமாக எதிர்ப்பார்க்கின்றது. ஒன்று இனப்பிரச்சினை விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் எடுக்கின்ற எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவது. அதாவது இந்திய நிலைபாட்டுக்கு ஏற்ற வகையிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரித்தல். இரண்டாவது. வடக்கு கிழக்கில் இந்திய உதவித் திட்டங்களுக்கு இடமளிப்பதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு வேறு எந்த நாடுகளின் தலையீடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்பது.

கூட்டமைப்பின் நிலைப்பாடு

ஆட்சி மாற்றத்தின் மூலம் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவது என்ற கோசம் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் ஏன் முஸ்லிம் மக்களுக்கும் சாதகமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அது சாதகமாக இருந்தாலும் கூட வடக்கு கிழக்கில் இராணுவம் நீக்கப்பட்ட ஜனநாயக கட்டமைப்பு ஒன்றை எதிர்ப்பார்க்கின்றனர். இனப்பிரச்சினை தீர்வுக்கு முன்னர் அந்த ஜனநாயகக் கட்டமைப்பு அவசியம் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் வலியுறுத்தியிருந்தது. இந்த விடயம் குறித்து புதுடில்லியில் கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்து விட்டால் அந்த ஜனநாயகக் கட்டமைப்பு இயல்பாக வந்து விடும் என்று கூறியிருக்கின்றார்.

இந்த இடத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக எழுகின்ற கேள்வி என்னவென்றால் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழர் பிரச்சினையை வெறுமனே ஒரு ஆட்சி மாற்றத்துடன் தீர்க்க முடியும் என்ற கருத்தை இந்திய மத்திய அரசுக்கு அல்லது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு சொன்னார்களா? அமைச்சுப் பதவியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்க வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து பேசியபோது கோரிக்கை விடுத்திருந்தார். ஆகவே மங்கள சமரவீர புதுடில்லியில் அவ்வாறு நம்பிக்கையுடன் கூறியிருக்கின்றார் என்றால் அமைச்சுப் பதவியை ஏற்கும் விடயம் குறித்து ஏதோ மறைமுகமாக உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

எந்த வழியிலாவது அமைதி?

இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் எந்த வழியிலாவது அமைதி ஏற்பட்டு விட்டால் போதும் என்ற மனநிலை உண்டு. ஏன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளும் அவ்வாறான கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 60 ஆண்டுகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் விட்டுக் கொடுத்தால் இந்தியா அதனை வரவேற்கும். ஏனெனில் தேசிய இனங்கள் தனித்துவ அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புவதில்லை. ஆகவே இலங்கை அரசாங்கத்துடன் அல்ல இலங்கை அரசு என்ற கட்டமைப்பில்தான் பிரச்சினை என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் எழுகின்றன.

சர்வதேச அரசுகள் என்பது தமது அரசியல் பொருளாதார நலன்களில் மாத்திரமே கவனம் செலுத்தும். வேறு நாடுகளில் இடம்பெறுகின்ற தேசிய இனங்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக பார்த்தாலும் பிரச்சினைப்படுகின்ற இனங்கள் இணங்கிப் போகுமானால் அவர்களும் அதுதான் சிறந்த ஜனநாயகம் என்று கூறுவார்கள் பரிசுகளையும் வழங்குவார்கள். ஆகவே பிரிபடாத இலங்கைக்குள் தீர்வு என்றால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொருள்கோடலை கூட்டமைப்பு வற்புறுத்தவில்லையானால் இந்தியாவும் இலங்கையும் விரும்புகின்ற தீர்வுதான் கிடைக்கும்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila