மரண ஊர்வலத்தை வழிமறித்து அட்டகாசம் செய்த இளைஞர்கள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் மரண ஊர்வலத்தில் சென்ற மேளத்தை, தமக்காக அடிக்குமாறு போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், மரண வீட்டுக்கும் சென்று தாக்குதலையும்  மேற்கொண்டுள்ளனர். 
இசசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அருகில் மரண வீடொன்று இடம்பெற்றுள்ளது. இணுவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு பூதவுடல் தகனம் செய்வதற்காக மேளத்தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மயானத்துக்கு செல்லும் வழியில் மதுபோதையில் நின்ற இளைஞர் குழு, மரண ஊர்வலத்துடன் வந்துகொண்டிருந்த மேளத்தை வழிமறித்து, தாமும் ஆட வேண்டும் என்றும் மேளத்தை தமக்காக அடிக்குமாறும் கூறியுள்ளது.
மேளம் அடிப்பவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, அந்தக் கும்பல் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டது. அவ்வேளை மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மதுபோதையில் நின்றவர்களை அடித்து அங்கிருந்து விரட்டி விட்டனர்.
அடிவாங்கி சென்ற கும்பல் மேலும் பலரை தம்முடன் இணைத்துக் கொண்டு வாள்கள், கம்பிகள் மற்றும் பொல்லுகளுடன் வந்து மயானத்தை சுற்றி வளைத்து நின்று கொண்டு தம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தாக்குதலை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர்.
பொலிஸாரை கண்டதும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தப்பிச் சென்ற அந்த குழு மரண சடங்கு இடம்பெற்ற வீட்டுக்கு வந்து, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் வீட்டுக்கு முன்பாக நின்ற வான் ஒன்றின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியவேளை, அதில் ஒருவரை மாத்திரம் அயலவர்கள் வாளுடன் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila