வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கிறீஸ் மனிதனை உருவாக்கும்: கிழக்கு முதல்வர் எச்சரிக்கை

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் மீண்டும் இலங்கையில் கிறீஸ் மனிதனையும், பொதுபலசேனாவின் அட்டகாசத்தையும், தோற்றுவிக்கும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்று நல்லாட்சி மலர்ந்துள்ளது. மீண்டுமொரு பயங்கரமான குடும்பாட்சியை இலங்கையில் அமைக்க யாரும் அனுமதிக்கக்கூடாது. அப்படி மீறி நாம் வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் நம்மை நாமே புதை குழிக்குள் தள்ளிவிடுவதற்கு சமமானதாகும்.
கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடாத்திய குடும்ப ஆட்சியில் இருந்து விலகி இன்று நல்லாட்சியில் இருப்பதனை தொடரவேண்டுமானால், நாம் வெற்றிலைக்கு வாக்களிக்காமல் ரணிலை மீண்டும் பிரதமராக்கும் நோக்கில் நமது ஒவ்வொருவரினதும் வாக்குகள் அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இன்று குருணாகல் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் அவர் அடையும் தோல்வியால் இனியொருபோதும் அரசியலை நினைத்துப் பார்க்காதளவு அமையவேண்டும்.
தன்னாட்சியின் மூலம் இந்நாட்டில் தன் குடும்பம் தேவைக்கதிமாக சம்பாதித்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி என்ற பதவியுடன் வீட்டில் இருக்கவேண்டிய மகிந்த ராஜபக்க்ஷ மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் கேட்பதன் காரணம் என்ன.?
இலங்கையில் தற்பொழுது நிலவியிருக்கும் சுமுகமான நிலையினைக் குழப்பி மீண்டும் நானே ராஜா, நானே மந்திரி, எல்லாம் நானும் எனது குடும்பமும்தான் என்று ஆட்சி புரியவா? என்று கேட்க விரும்புகிறேன்.
எனவே இலங்கை வாழ் மக்கள் மீண்டும் ஒரு தவறினைச் செய்ய இடமளிக்காமல் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் நோக்கில் நமது வாக்குகளை பயன் படுத்தவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila