இனப்படுகொலை தொடர்பில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். பதிவு இணைய செய்தி
வடக்கு முதலமைச்சரின் இனவழிப்பு தொடர்பிலான தீர்மானத்தினை வரவேற்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
மாண்புமிகு முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தன்னைப் போன்ற பல சட்டத்தரணிகளினதும், பேராசிரியர்களினதும், நண்பர்களினதும் துணையுடன் இந்தப் பிரேரணையை தயாரித்ததாக தனது முன்னுரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பிரேரணை ஒன்றும் ஒரு சில நாட்களுக்குள் தயாரித்துவிடக் கூடிய ஒன்றல்ல. எனவே, இதற்குப் பின்னால் சில நாட்களாகவே தீர்க்கமான முடிவொன்றின் அடிப்படையில் முதலமைச்சர் செயற்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
தனது தமிழ் உரையில் தெட்டத்தெளிவாக, எவரது கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில் இந்தப் பிரேரணையை தான் ஏன் முன்மொழிகிறேன் என்பதற்கான நியாயப்பாடுகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 2013ம் ஆண்டு, செப்ரம்பர் மாதம் அப்போதைய ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அம்மையார் வடக்குக் கிழக்குக்கான நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இருந்தாலும் எம்மால் இயன்றவரை, இராணுவப் புலனாய்வுகளின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒரு சில நிமிடங்களாவது அவரை நேரடியாகச் சந்தித்து இங்கு நடந்த இன அழிப்பைப் பற்றிய எமது கருத்துக்களை முன்வைக்க முயன்றோம்.
அவரது நிகழ்ச்சிநிரல் கொழும்பில் இருந்தே தீர்மானிக்கப்பட்டது. நான் கூட அவரை ஒரு சில நிமிடங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து சந்தித்தேன். இதைப் போல பல இடங்களிலும் சந்தித்த பலர், குறிப்பாக மனிதநேயச் செயற்பாட்டில் ஈடுபடும் கிறிஸ்தவ மத குருமார்கள் உள்ளிட்ட பலர், இங்கு நடந்தது இன அழிப்பு என்று நவநீதம்பிள்ளை அம்மையாருக்குச் சொல்லியிருந்தபோதும், அம்மையார் அவர்கள் இலங்கையில் இருந்து திரும்புவதற்கு முன்னதாக கொழும்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், வடக்கு கிழக்கில் தன்னைச் சந்தித்த எவரும் தனக்கு இன அழிப்பு என்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்ற முரண்பாடான கருத்தை முன்வைத்தார்.
இது எம்மையெல்லாம் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. காணமற் செய்யப்பட்ட உறவுகளுக்காகக் குரல் கொடுத்துவரும் நான் இன அழிப்புக்காக எமது குரல் தாயகத்தில் இருந்து சர்வதேச மட்டம் வரையும் ஒலிக்கவேண்டும் என்று அப்போது முடிவெடுத்தேன்.
என்னைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் எனது மனச்சாட்சியின்படி நியாயமாக நடக்க வேண்டுமானால் எனக்கு பெருமளவில் வாக்களித்த மக்களின் அங்கீகாரத்தையே வடமாகாண சபையின் குரலாக சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
நவநீதம்பிள்ளை அம்மையார் வடக்கு கிழக்கில் தான் சந்தித்த எவரும் இன அழிப்பு என்று தனக்குக் கூறவில்லை என்று சொன்னபோது, அதற்கு எதிராக ஒரே ஒரு தமிழ்த் தலைவர்தான் உலக மட்டத்தில் குரல் எழுப்பினார். அது மலேசியாவின் பினாங்கு மாகாண உதவி முதலமைச்சரான பேராசிரியர் ஆர் இராமசாமி ஐயா அவர்கள். கடந்தவருடம் மலேசியாவில் அவர் ஒழுங்கு செய்த உலகத் தமிழ் மாநாடு ஒன்றுக்கு என்னையும் அழைத்திருந்தார்.
ஜெனிவாவில் எனது கருத்தை முன்வைக்க நான் விரும்பியபோது அதற்கு வடக்கு மாகாணசபையின் ஆணையை வழங்கும் வகையிலான முடிவை முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஜெனிவாவில் எனது குரலை தணிக்கை செய்ய எம்மிடையே உள்ள உட் சக்திகள் சில எப்படியெல்லாம் முயற்சி செய்தன என்பதை நான் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் முயற்சி ஒன்றின் ஊடாக நான் மீண்டும் ஜெனீவா சென்றபோது எனக்கு பாதுகாப்புக்கூட எவரும் தரவில்லை.
மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுத்து ஜெனிவா சென்றபோது அங்கு மனித உரிமை சபையில் நான்கு தடவை நான் நேரடியாகவே கலந்து கொண்டு 3 முறை ஆங்கிலத்திலும், ஒரு முறை தமிழிலும் இன அழிப்புத் தொடர்பான தாயகத்தில் மக்களின் ஜனநாயக ஆணை பெற்ற குரலாக, பெண்களின் குரலாக, ஒரு தாயின் குரலாக முன்வைத்தேன்.
வெறும் ஓர நிகழ்வுகளில் மட்டும் எங்களை பொம்மைகளாகக் கையாண்டு தாங்கள் சொல்ல விரும்பும் செய்தியை மட்டுமே பிறர் சொல்ல முயல்கிறார்கள் என்பதையும்.
இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று எந்த அளவில் எல்லாம் அழுத்தங்களைப் போடுகிறார்கள் என்பதையும் நான் அங்கு சென்றபோது நேரடியாகக் கண்டுகொண்டேன்.
அங்கு வந்திருந்த புலம் பெயர் பிரதிநிதிகள் கூட தங்களாலேயே ஜெனிவாவுக்குள் இன அழிப்பு என்று கடுமையாகச் சொல்லக் கூடாதென்று அழுத்தம் இருப்பதாகவும், நான் அங்கு கதைத்தபோது தாங்கள் எல்லோரும் மெய்சிலிர்த்துப் போனதாகவும் எனக்குச் சொன்னார்கள்.
அப்போதுதான் எனக்கு அங்கிருக்கும் அழுத்தங்களின் ஆழம் விளங்கியது.
எமக்கு நடந்ததும் தொடர்ந்தும் பலவேறு வடிவங்களில் நடப்பதும் இன அழிப்பு என்று நாம் சொல்லக்கூடாது என்றும், ஏதோ தமிழகத்திலும், புலம்பெயர் சூழலிலும், தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற ஒரு கட்சியும், தமிழத் தேசியக் கூட்டமைப்புக்குள் எங்களைப்போல ஏதோ ஒரு சிலரும் மட்டுமே இதைச் சொல்கிறார்கள் என்பது போன்ற பொய்யான பரப்புரையும் கூட இருந்தது.
தற்போது ஐ.நா. மனித உரிமைச் செயலகத்தால் மேற்கொள்ளப்படுவது ஒரு ஐ.நா அறிக்கையாகவே வெளிவரும். நீதிபதிகளால் சாட்சியங்கள் நேரடியாக விசாரிக்கப்பட்டு, இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நீதிபதிகள் நேரடியாகத் தரிசித்து, சட்ட ரீதியான குற்றவியல் விசாரணையாக இது வடிவமைக்கப்படவில்லை.
ஐ.நா.வின் மனித உரிமைச் சபையினால் செய்யக்கூடிய அதி கூடிய கொமிசன் ஒவ் இன்குவாரி (விசாரணைக் கமிசின்) ஆகவும் இது உருவாகியிருக்கவில்லை. ஆனாலும், இதன் முன் நான் நேரடியாக ஜெனிவாவில் சாட்சியமளித்தேன். எழுத்துமூலமாகவும் 10 பக்கங்களில் இன அழிப்பு குறித்து என்னால் வழங்கக்கூடிய ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.
இதேவேளை, கௌரவ சிவாஜிலிங்கம் அவர்களின் முயற்சியால், வடமாகாண சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கையெழுத்தோடும் கிழக்கு மாகாண சபையில் 5 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களின் கையெழுத்தோடும் இன அழிப்புத் தொடர்பான மகஜர் ஒன்று ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இது கூட உள்ளும் புறமும் ஏதோ ஒரு சிலரின் கோரிக்கை என்று மலினப்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் மீண்டும், கௌரவ சிவாஜிலிங்கம், ரவிகரன், அன்ரன் ஜெகநாதன் மற்றும் நான் ஆகிய நால்வரும் இது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படவேண்டும் என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுத்து வந்தோம்.
முதலமைச்சர் அவர்கள் அழுத்தங்களுக்கு மட்டும் அடிபணிந்து போகும் ஒருவர் அல்ல. தீர்மானத்திற்கான தேவையை, நியாயப்பாட்டை நாங்கள் தொடர்ந்து கூறிவந்த அதேவேளை அவரோடு தொடர்புடைய பல்வேறுபட்ட நல்ல சக்திகளும் இதுகுறித்து சிந்தித்து செயலாற்றும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.
நாங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், எமக்கு எதிராக யார் யார் செயற்படுகிறார்கள் அவர்கள் ஏன் இப்படியெல்லாம் செயற்படுகிறார்கள் என்பது பற்றி முதலமைச்சர் அவர்கள் தனக்குள் சிந்தித்திருப்பார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஏனென்றால் அவர் மனச்சாட்சியுள்ளவர். அவர் மற்றையவர்களைப் போன்ற அற்ப அரசியல்வாதி அல்ல. தீர்மானத்தை நிறைவேற்றியபோது முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய அறிமுக உரையை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மீண்டும் கேட்டும் படித்தும் ஆராயவேண்டும்.
இதிலே ரணில் விக்கிரமிசிங்கா குறித்து முதலமைச்சர் கூறியிருப்பது, நான் எனது மனச்சாட்சிக்கு ஒப்பாக எவ்வாறு தேர்தலுக்கு முன்னரே எனது கருத்தைப் பதிவு செய்தேனோ, அதைப் போல, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வேண்டுமென்றால் முதலமைச்சருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும்!
ஆகவே, என் மீதான இடைநிறுத்தம் குறித்த அச்சுறுத்தலுக்கெல்லாம் ஒரு தீய தேர்தல் அரசியலோடு சம்பந்தப்பட்ட நோக்கு ஒன்று உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை முதலமைச்சர் போன்றவர்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறான திரிபுவாத சக்திகளை நல்வழிப்படுத்தும் பணியிலும் முதலமைச்சர் ஈடுபட வேண்டும். வெளிச்சக்திகளின் நோக்கத்திற்கு மட்டும் துணைபோகும் திரிபுவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சரின் முன்னுதாரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அனைவரும் பின்பற்றினால், நேர்மையான, அப்பழுக்கற்ற ஒரு புதிய தலைமை எமக்கு உருவாகும்.
நான் அண்மையில் தமிழகம் சென்று வந்தேன். அங்கு பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. எமது முதலமைச்சரின் வட இந்திய சார்பு நிலை, தமிழகத்தின் தமிழ்த்தேசிய சக்திகளை அவர் புறக்கணிக்கிறாரா என்பது போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் அங்கு தொடுத்தார்கள்.
முதலமைச்சரின் தமிழ்த் தேசிய சார்பு நிலை எப்படியானது என்பதற்கு இந்த பிரேரணை ஒரு தகுந்த முன்னுதாரணம். இனிவரும் காலங்களில் எமது முதலமைச்சருக்கும் தமிழகச் செயற்பாட்டாளர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே புரிந்துணர்வு உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் உலகளாவிய தமிழ் மக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்:
இந்த ஜனநாயகத் தீர்மானத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லுங்கள். எம்மைப் போன்றவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்தவாறு அதன் பிறழ்வுநிலையை மாற்றியமைக்கும் வேலையில், மிகுந்த துன்பங்களை அனுபவித்தவாறே ஈடுபட்டாலும், அதற்குத் தக்க பலன் கிட்டும் என்பதற்கு இந்த் தீர்மானம் ஒரு முன்னுதாரணம்.
ஆகவே, கொள்கைரீதியிலான ஒருமித்த கருத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்தவும், உள் ஜனநாயகத்தை வலியுறுத்தவும் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பு மிகவும் முக்கியமாகும்.
குறிப்பாக இன அழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச தரப்புகளுக்கு முன்வையுங்கள். இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றெல்லாம் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். வடகிழக்கில் இன அழிப்பு இராணுவத்தின் ஒரு சிப்பாய் கூடத் தேவையில்லை என்பதில் தீர்மானமாயிருங்கள்.
முதலமைச்சர் கூட முழுமையாக இராணுவ வெளியேற்றத்தைக் கோரவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் எமது முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் சிறிலங்கா இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவேண்டும். இதற்கு சர்வதேச அழுத்தம் ஒன்றே வழிவகுக்கும்.
இது அடுத்த கட்ட முன்னெடுப்புக்கான முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட வேண்டும். இன அழிப்புக்கான உண்மையான சர்வதேச விசாரணையை இந்தத் தீர்மானம் கோரியிருக்கிறது. இதை சர்வதேச அரங்குகளில் எல்லாம் வலியுறுத்துங்கள். மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை செயலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகவேண்டும். அது வெளியாவதற்கு முன்னதாகவே முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது சாணக்கியமான ஒரு நகர்வு:
கொழும்பை மையப்படுத்திச் சிந்தித்த சேர் பொன் அருணாச்சலம் போன்றவர்கள் தொடக்கம் தந்தை செல்வாவின் மருமகனான பேராசிரியர் வில்சன் வரை தமது அரசியல் வாழ்வு முடிந்த இறுதிக் கணங்களிலேயே தமிழ்த் தேசத்தை மையப்படுத்திச் சிந்திக்கத் தாம் தவறியதை உணர்ந்தார்கள்.
ஆனால், இவர்களில் இருந்து முதலமைச்சர் வேறுபடுகிறார் என்பதை இந்தத் தீர்மானம் எடுத்துச் சொல்கிறது. ஏனென்றால், காலாவதியாகிப்போன வேளையில் கவலைப்படும் நிலை இனி அவருக்கு வராது. காலம் தவறாத காரியம் ஒன்றைச் செய்த மனநிறைவு இறுதிக்கணம் வரை அவருக்கு இருக்கும்.
ஆனாலும், கொழும்பை மையப்படுத்திச் சிந்திக்கும் சிக்கலான போக்குடையவர்கள் இன்னும் எம்மத்தியில் இருப்பதே எமக்கு இருக்கும் பெரிய சவால். இதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்றும் இத்தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்.
Add Comments