
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழு இன்று கூடவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இடம்பெறச் செய்யும் வகையில் அரசியல் தீர்வு திட்ட வரைபு ஒன்றை தயாரிக்கவும், அரசியலமைப்பு குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் உருவாக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு தனது முதலாவது அமர்வை நடத்தவுள்ளது.
இந்த அமர்வு காலை 10 மணிக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோருடைய கூட்டு தலமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில் வடமாகாண சபையின் சார்பிலும் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவேண்டுமென வடமாகாணசபையின் 44ஆவது அமர்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோருடைய கூட்டுத்தலைமையில், 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.