247ஏக்கரை விடுவிக்க 130கோடி மக்களின் பிரதமர் வரும்போது ஏனைய நிலங்களை விடுவிக்க எந்த தலைவர்வரவேண்டும்

247ஏக்கரை விடுவிக்க 130கோடி மக்களின் பிரதமர் வரும்போது ஏனைய நிலங்களை விடுவிக்க எந்த தலைவர்வரவேண்டும்
 
247ஏக்கரை விடுவிக்க 130கோடி மக்களின் பிரதமர் வரும்போது ஏனைய நிலங்களை விடுவிக்க எந்த தலைவர் வரவேண்டும்?: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் வலி கிழக்கில் உள்ள வளலாய் பகுதி 25 வருடங்களின் பின்னர் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வு ஓர் உணர்வுபூர்வமான நிகழ்வாக இருந்தது. ஒரு நிலத்தின் பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தை அடையும்போது எப்படி இருப்பார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியும் துக்கமும் மேலிட்டது.

இராணுவத் தடுப்புக்கள் நீக்கப்பட்டு அந்த மக்கள் வேகமும் ஆவலும் நிரம்ப நடந்து செல்லும் காட்சியை பார்க்கும்போது யாழ்ப்பாண இடப்பெயர்வே நினைவுக்கு வந்தது. அது மாபெரும் அவலம். அந்த அவலக் காட்சியின் துளியளவுகூட இந்தக் காட்சி இல்லை என்றாலும் அது நினைவுக்கு வந்தது. 1995ஆம் ஆண்டில் நடந்தது யாழ் இடப்பெயர்வு. வலி மக்களோ 1987 முதல் – 1990 வரையான காலத்தில் தமது சொந்த நிலத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்டவர்கள்.

25 ஆண்டுகளாக இராணுவத்திடம் இருந்த அந்த நிலப்பகுதி முற்றாக அழிவடைந்து பற்றை மண்டி பாழடைந்துபோய் காணப்படுகிறது. அங்கு இருந்த வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. கோயில்கள், பாடசாலைகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகம் அங்கு வாழ்ந்தனர் என்றோ இது சனங்கள் வாழ்ந்த ஓர் கிராமம் ஒன்றோ என்று கருதமுடியாதபடி யாவும் அழிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழ்  மண்ணில் இவ்வாறு அழிப்பை மேற்கொள்வது எதற்காக? தமிழ் இனத்தின் நிலத்தையும் அதன் அடையாளத்தையும் திட்டமிட்டு அழிக்கின்றனர். வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர்களின் இருப்பை இல்லாது செளய்யும் நிலஅழி்த்தலில் ஈடுபடுகின்றனர். அந்தக் கிராமத்தின் பன்னெடுங்கால அடையாளமே அழிந்துபோய்விட்டது.

ஆக்கிரமிப்பாளர்கள் வேறு என்ன செய்வார்கள்? ஆக்கிரமிப்பாளர்கள் எதற்காக நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள்?  இதற்கு வளலாய் கிராமத்தின் அழிவுக் கோலம் தெளிவான பதிலைச் சொல்கிறது. இந்த நிலத்தை விடுவித்தமைக்காக புதிய அரசுக்கு கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் நன்றி தெரிவித்தார். இந்த நிலத்தை அழித்தமைக்காகவும் இத்தனை ஆண்டு காலமாய் அபகரித்து வைத்திருந்தமைக்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.

வளலாய் பகுதியுடன் அபகரிப்பக்கட்டிருந்த உயர்பாதுகாப்பு வலயத்திற்கான இராணுவத்தின் முன்னரங்க காவலரண் தற்போது பின் நோக்கிப் போயிருக்கிறது. 247 ஏக்கர் காணிகளுக்கு அப்பால் அது பின் நோக்கியிருக்கிறது. அதற்கு அப்பாலும் சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயமாக தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டிருக்கிறது. 247 ஏக்கர் தமிழர் நிலத்தை விடுவிக்க இந்தியாவின் 130 கோடி மக்களின் பிரதமர் ஒருவர் வரவேண்டும் என்றால் ஏனைய ஆறாயிரம் ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க எந்த நாட்டுப் பிரதமர்? எத்தனை நாட்டுத் தலைவர்கள் வரவேண்டும்? அல்லது நரேந்திரமோடி எத்தனை தரம் வரவேண்டும்?

ஈழத் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்த நிலையில் அல்லது ஏமாந்த நிலையில் இலங்கை சிங்களவர்களிடம் கையளித்துச் சென்ற பிரித்தானிய நாட்டின் இந்நாள் பிரதமர் இலங்கை வரும்போது வலி வடக்கு மக்களை சந்தித்தார். நிலம் பிரிந்த மக்களின் கண்ணீர் கதையைக் கேட்டார். அப்போதும் இந்த மக்களின் நிலம் விடுவிக்கப்படவில்லை. இந்தியப் பிரதமரின் வருகையின்போது இந்த  சொற்ப நிலம் விடுவிக்கப்படுகிறது என்பது சிந்திக்கத்தக்கது.

இந்த விடயம் ஒன்றே இலங்கையில் தமிழ் மக்களின் நிலமை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழ் மக்களுக்கான உரிமையும் சமத்துவத்தின் ஏற்றத் தாழ்வும் தமிழ் மக்கள் கையாளப்படும் விதமும் எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இயலும். தமிழ் மக்களின் நில விடுதலையும் இன விடுதலையும் எத்தகைய அவசியம் என்பதையும் இங்கு உணர்த்தப்படுகின்றது.

வளலாயை விடுவிக்கும் நிகழ்வில் வளலாய் மக்கள் மகிழ்ச்சியோடும் துயரத்தோடும் ஆற்றாமையோடும் வந்திருந்தார்கள். நிலம் திரும்பியதில் மகிழ்ச்சி என்கிறார்கள். நிலம் அழிவடைந்திருப்பது துயரம் என்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை அகதியாக வாழ்ந்து கழித்து நலிந்துபோய்விட்டதை அவர்களின் தோற்றங்கள் வெளிப்படுத்தியது. அந்த மக்கள் நிலத்தை இழந்தமையால் இழந்த வாழ்க்கையை ஈடுசெய்ய முடியாது என்பதும் இழந்தை இழந்தமையால் எத்தகைய பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் அந்த மக்களின் தோற்றம் வெளிப்படுத்துகிறது.

நலிந்து போனவர்களாக நாவறண்டவர்களாக பேச முடியாதவர்களாக நினைவுகள் அற்றவர்களாக பேதலித்தவர்களாக அந்த மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். உண்மையில் ஓர் முதுபெரும் சனக்கூட்டத்தை அவர்களின் நிலத்தை அவர்களிடமிருந்து பிரித்தால் அவர்கள் எப்படி நலிந்து ஒடுக்கிப் போவார்கள் என்பதை வலி வடக்குமக்களைப் பார்க்கும்போது வெளிப்படுகின்றது. இதுதான் ஈழத் தமிழ் மண் முழுவதும் எங்கும் நடக்கிறது. ஈழம் முழுவதும் பல காணிகளில் நடக்கிறது.

வலி கிழக்கை சேர்ந்தவளலாய் கிராமத்தை விடுவிக்கும்போது வலி வடக்கை சேர்ந்த மக்களும் வந்திருந்தார்கள். தங்கள் கிராமத்தை எப்போது விடுவார்கள் என்று அந்த மக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்கள்? முதுமையோடும் நலிவடைந்த தோற்றத்தோடும் எங்கள் ஊருக்குப் போக வேண்டும் என்று வலிமையோடு அந்த மக்கள் கூறினார்கள். பலாலிக்கு எப்பொழுது விடுவார்கள்? கட்டுவனுக்கு எப்பொழுது விடுவார்கள்? என்று அந்த மக்கள் கேட்கிறார்கள்.

இந்த மக்கள் தொடர்ந்தும் தங்கள் பூர்வீக நிலத்தைப் பிரிந்து அகதிகளாக வாழக்கூடாது. வாழவும் முடியாது. யுத்தத்தில் இரத்தம் சிந்தவைக்கப்பட்டு பல லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்ல வைக்கப்பட்டார்கள். வலி வடக்கு போல ஈழத்தின் பல இடங்களில் சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டு மக்கள் உளவியல் ரீதியாக கொல்லப்பட்டுகின்றனர். அவர்களின் பூர்வீகமும் அடையாளங்களும் வரலாறும் மௌனமாக கொல்லப்படுகின்றன.


அதுமாத்திரமல்ல மீண்டும் ஒருமுறை இந்த மக்கள் இடம்பெயரக் கூடாது என்பதும் இந்த மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படக்கூடாது என்பதும் இந்த காணிகளை அபகரிக்கும் திட்ட மிட்ட குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதும் இங்கு முக்கியமானது. தமிழர் நிலம் தமிழரிடம் இருக்க வேண்டும். தமிழர் நிலத்திற்கு பாதுகாப்பு வேண்டும். அதற்காகவே ஈழ மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila