ஜெயக்குமாரி உட்பட 8பேர் பிணையில் விடுதலை 6 பெண்கள் 2ஆண்கள்- ஒன்றரை வயதுக் குழந்தையும் வீடுசெல்கிறது

ஜெயக்குமாரி உட்பட 8பேர் பிணையில் விடுதலை 6 பெண்கள் 2ஆண்கள்- ஒன்றரை வயதுக் குழந்தையும் வீடுசெல்கிறது:

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், சந்தேகத்தின்பேரில் முன்னைய அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்த பலருள் தொடர்ந்து சிறையில் தடுத்து வைக்கப் பட்டிருந்தவர்களில் 8 பேரை, இன்று நிபந்தனையுடன் கூடிய, பிணையில் செல்ல கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் அனுமதித்திருக்கின்றது என்று இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளில் ஒருவராகிய மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்தார்.

இவர்களில் ஜெயக்குமாரி பாலேந்திரன் உட்பட 6 பெண்கள் அடங்குவர். இந்தப் பெண்களில் ஒரு பெண் தனது ஒன்றரை வயதுடைய குழந்தையுடன் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கணவனையும் சேர்த்து இந்தப் பெண் குடும்பமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆறு பெண்களைத் தவிர இரண்டு ஆண்களும் பிணையில் செல்ல அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்
.
பாலேந்திரன் ஜெயக்குமாரி, மகாலிங்கம் பத்மாவதி, ரவீந்திரன் மதனி, லோகநாதன் மகேஸ்வரி, றீகன் சுபானியும் அவருடைய 16 மாத வயதுடைய கைக்குழந்தை, சசிகரன் தங்கமலர் ஆகிய 6  பெண்களும், கிருஸ்ணராஜா சிறிதரன், அருணாச்சலம் ஆகிய இரண்டு ஆண்களுமாக மொத்தம் 8 பேர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒரு கைக்குழந்தையோடு, 6 பெண்களுக்கும், 2 ஆண்களுக்குமாக 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கின்றது என்றும்  சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் கூறினார்.

ஏனைய 5 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மங்களேஸ்வரி தெரிவித்தார்.
ஜெயக்குமாரி - பத்மாவதி ஆகிய இருவரையும்  கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம்  பிணையில் விடுதலை செய்தது:-
பயங்கரவாத மீளுருவாக்கத்திற்குத் துணையாக இருந்து செயற்பட்டிருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் செல்ல அனுதிக்கப்பட்டிருக்கின்றார்.
இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள இவர் தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மாதம் ஒரு தடவை சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது,

இவருடன் இதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பத்மாவதி மகாலிங்கம் என்ற 64 வயதுடைய பெண்மணியும் இதே நிபரந்தனைகளின் கீழ் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு பெண்களுமே காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைத் தேடிக் கொண்டிரு;நதவர்கள் என்பதுடன், ஜெயக்குமாரி காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றில் தனது 14 வயதுடைய மகளுடன் துணிவோடு முன்னிலையில் பங்குபற்றி மனித உரிமை மீறல்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைக்காக அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தமைக்காகவும், இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமரின் கவனத்திற்குக் காணாமல் போனவர்களுடைய விடயத்தைக் கொண்டு வருவதற்கும் முன்னிலையில் இருந்து செயற்பட்டிருந்தமையுமே இவரைக் கைது செய்வதற்கு அரச படையினரைத் தூண்டியிருந்ததாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila