அர்த்தராத்திரியில் குடை பிடிக்கும் அவைத் தலைவர்

orupaarvai78912வடமாகாண சபையின் அவைத்தலைவர் சிவஞானம் அவர்கள் எதிர்வரும் 14ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வடமாகாண சபை உறுப்பினர்கள் எவரையும் கலந்துகொள்ள அனுமதிக்கப்போவதில்லையென அறிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்த பின்னரே அவைத்தலைவர் அர்த்த ராத்திரி என்றாலும் பரவாயில்லை எனக் குடையை எடுத்து விரித்துவிட்டார்.
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தங்கள் குரலை எழுப்ப மாகாணசபை உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையில் தலையிடும் அதிகாரம் ஒரு ஜனநாயக நாட்டில் எவருக்கும் கிடையாது. ஆனால் அப்பயணங்கள் மாகாண சபையின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக உறுப்பினர்கள் மாகாண ஆளுகைக்கு அறிவிக்க வேண்டும் இது ஒரு சம்பிரதாய பூர்வமான அனுமதியேயொழிய மாகாணசபை உறுப்பினரின் பிறப்புரிமையில் தலையீடு செய்யும் ஒரு அதிகாரமல்ல.
எனவே ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வது தொடர்பாக சிவாஜிலிங்கம், அனந்தி ஆகியோர் இரண்டு வாரங்களுக்கு முன்பே ஆளுநருக்கு அறிவித்துவிட்டதாகவும் இன்னும் பதில் கிடைக்கவில்லையெனவும் பதில் கிடைத்தாலும் கிடையாவிட்டாலும் நாங்கள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது உறுதி எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
மாகாணசபையின் அவைத் தலைவர் மாகாணசபையின் அவை நடவடிக்கைகளுக்குத் தலமைதாங்கவும் அவை தொடர்பான நடவடிக்கைகளைக் கொண்டு நடத்தவும் அதிகாரம் கொண்டவர். அவர் அவைக்கு மட்டும்தான் தலைவரேயொழிய முழு மாகாண சபைக்கும் தலைவரல்ல. அவர் தன்னை மாகாண சபையின் தலைவராக எண்ணி அறிவித்தல்களை விடுப்பது வெட்கம் கெட்ட அற்ப ஆசை கொண்ட சிறுபிள்ளைத்தனமாகும்.
சிவாஜிலிங்கமோ அனந்தியோ ஜெனிவாவுக்கு இன விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவோ போகவில்லை. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் சர்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கவும் ஒரு சர்வதேச விசாரணையின் அவசியம் பற்றி வலியுறுத்தவுமே அவர்கள் அங்கு செல்கின்றனர்.
சி.வி.கே. சிவஞானம் அவர்களை அங்கு செல்லவிடாமல் தடுக்க முயல்கிறார் என்றால் இவர் எந்தப் பக்கம் நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சர்வதேசப் பார்வைக்குப் போவதைத் தடுக்க முயல்கிறார் என்றால் இவர் இலங்கையின் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே செயற்படுகிறார் என்று அர்த்தம்.
இவரின் இனத்துரோக நடவடிக்கை இதுதான் முதல்தடவையல்ல. அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மாகாண சபையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச தீர்ப்பாயம் நிறுவப்பட்டு இதன்மூலம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவந்தபோது அதை அனுமதிக்க மறுத்துவிட்டார். முதல்வரும் அமைச்சர்களும் உறுதியாக இருந்த காரணத்தால் நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின் இது நிறைவேற்றப்பட்டது.
எம்மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான சர்வதேச விசாரணை வேம்பாய்க் கசக்குமளவுக்கு அவரின் அரசதரப்புக்கு அடிவருடும் கீழ்மை மேலோங்கி நிற்கிறது.
அதற்கு அவர் கூறிய காரணம் கட்சியின் அனுமதி இல்லாமல் அதை நிறைவேற்ற முடியாது என்பதுதான். கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தினாலேயே சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதை வசதி கருதி இவர் மறந்துவிட்டார்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் கனவில் மிதந்த அவர் அது சி.வி விக்னேஸ்வரனுக்கு வழங்கப்படப்போகும் வேளையில் இவர் தமிழரசுக்கட்சியின் நல்லூர் கிளை என்ற பேரில் கட்சிக்கு எதிராக குழப்பம் விளைவி;த்ததன்மூலம் இவர் தனது கட்சி விசுவாதத்தை வெளிப்படுத்தியதை மறந்துவிடமுடியாது.
இப்படியான இவரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பூசி மெழுகும் முகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா முதலமைச்சர் மேல் குற்றச்சாட்டுகளைக் கொட்டத் தொடங்கியுள்ளார். ஆனால் சிவஞானத்தின் அப்பட்டமான துரோக நடவடிக்கைகள் மாவையின் கண்களில் படவேயில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றும் பதவிகளைப் பெற்றவர்கள் அதே பதவிகளைத் தமிழ் மக்களுக்கு விரோதமாகப் பாவிக்கும் நிலைமை சம்பந்தன், சுமந்திரன் தலைமையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
சிலருக்குப் பதவிக்கு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பார்களாம். அதே பாதை தொடர்நதால் குடையும் இழந்து கோலும் இழக்கும் நிலை வெகு விரைவில் எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila