மகிந்த அரசைப் பின்பற்றினால் புதிய அரசும் எமக்குத் தேவையில்லை கூட்டமைப்பு தெரிவிப்பு

காணாமற் போனோர் விடயத்தில் மகிந்த அரசு கூறியதனை போன்று தற்போதைய அரசும் கூறினால் அவ்வாறான அரசு எமக்கு தேவையில்லை என்றும் இவ்வாறு செயற்படுபவர்கள் தமிழர்களின் ஆதரவினை எதிர்பார்க்க முடியாது எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் இனத்திற்கு நீதி கோரி முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ் நோக்கிய நடை பவனியும் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நேற்று நல்லூரில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த காலங்களில் இராணுவத்தினாலும் அதன் ஒட்டுக் குழுக்களினாலும் கடத்தப்பட்டுள்ளனர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பலரது முன்னிலையில் சரணடைந்துள்ளனர் மற்றவர்கள் பெற்றோர்கள் முன்னிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களின் நிலை இருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் என்று யாரும் வடக்கு கிழக்கில் இல்லை எனவும் அவ்வாறு இருந்தாலும் அவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

பிரதமரின் இக்கருத்து ஒரு பொறுப்புள்ள ஒருவரின் கருத்தாக இல்லாமல் வீதியால் செல்பவனின் கருத்தாகவே அமைந்துள்ளது. இவர்கள் இவ்வாறு கூறுவதற்காக எமது மக்கள் இவர்களிற்கு வாக்களிக்கவில்லை. இவ்வாறு கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் ஆதரவுகளினையும் எதிர்பார்க்க கூடாது

முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தமிழர் தரப்பில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமையால் தான் அவரை தமிழ் மக்கள் தூக்கிஎறிந்தனர். அதேபோல் தற்போதைய அரசினையும் மக்கள் தூக்கி எறிவதற்கு காலம் செல்லாது. ஆகவே பொறுப்புடன் புதிய அரசு செயற்பட வேண்டும்.

எமது போராட்டங்கள் உண்மையினை கண்டறியும் வரையிலும் எமது காணாமல் போன உறவுகள் மீண்டும் கிடைக்கும் வரையிலும் எமது போராட்டங்கள் தொடரும் எமது மக்களின் கோரிக்கைகளினை சர்வதேசம் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila