பிரதமர் ரணில் விக்ரமசிங்க- வன்னி பிரதிநிதிகள் சந்திப்பு

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது'

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மூன்று-நாள் வடக்கு பயணத்தின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கின்றார்.
தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்தச் சந்திப்பில் சிறிதரன் கலந்து கொள்ளவில்லை.
எனினும், பிரதமருடனான சந்திப்பில் தானும் மற்றுமொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மற்றும் நலன் விரும்பிகள் சிலரும் கலந்து கொண்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கிளிநொச்சி உட்பட வன்னி மாவட்டங்களின் நிலைமைகள், மக்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பவை குறித்து பிரதமர் தங்களிடம் கேட்டறிந்து கொண்டதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மக்களின் வீடில்லாப் பிரச்சனை, வாழ்வாதாரப் பிரச்சினைகள், இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிப் பிரச்சனைகள், மீனவர் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக அடைக்கலநாதன் கூறினார்.
இதனிடையே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச செயலகங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அந்தந்த மாவட்டங்களின் பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல்அங்கங்களை இழந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான பல விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளன.
அவ்வாறே, புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் உதவிகள் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்குத் தகுதியானவர்கள் 300 பேரையாவது தமிழகத்திற்கு அனுப்பி பயிற்சி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்டிருப்பதாகவும் ரணில் தெரிவித்தார்.
மேலும் மலேசியா. சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் இருந்து மருத்துவர்களின் உதவியைப் பெறுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அதற்கு அடுத்ததாக தென் பகுதிகளில் இருந்து வருகின்ற சிங்கள மீனவர்களின் பிரச்சனை குறித்து கவனம் செலுத்தப்படும்' என்று கூறியுள்ளார் ரணில் விக்ரமசிங்க.
யுத்தத்திற்கு முன்னர் தெற்கிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்து மீன்பிடித்த மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் ஏனையவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வேண்டுகோளையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஒருவார காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீள்குடியேற்ற அமைச்சருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila