ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஸ்திரப்படுத்தவேண்டும்

நல்ல குணம் என்பதும்  பலவீனம் என்பதும் வேறுபட்டவை. எனினும் பொதுவில் நல்ல குணத்தைப் பலவீனமாகப் பார்க்கின்ற நிலைமை நம்மிடம் உண்டு.

அந்த வகையில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நல்ல மனிதர் என்பது  புரிகின்றது. எனினும் அவரின் நல்ல குணம் அவரின் பதவியை- அதிகாரத்தைப் பலவீனமாக்கி விடுகிறதோ! என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி யேற்ற பின்னரும் நாட்டின் சில இடங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கட்டவுட்டுக்கள் அகற்றப்படாமல் இருந்தன.

முன்னாள் ஜனாதிபதியின் கட்டவுட்டுக்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. இதெல்லாம் வெறுவிலிகள் செய்கின்றவேலை. ஆகையால் அவை பற்றி நான் கருத்தெடுக்கமாட்டேன். அதேநேரம் எனக்கும் கட்டவுட் வைக்க வேண்டாம் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு.

இது நல்ல முடிவு. எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு வளாகத்தில் இருந்த மகிந்த ராஜபக்­வின் கட்டவுட்டுகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.

மகிந்தவின் கட்டவுட்டுக்களை பிரதமர்  ரணில் கண்டால் கடுப்படைவார் என்பதால் அப்படி ஒரு அதிரடி நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் வேடிக்கை என்னவெனில், பிரதமர் ரணில் வருவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். ஆனால் அந்த நேரம் மகிந்த ராஜபக்­வின் கட்டவுட்டுகள் அகற்றப்படவில்லை.

இங்குதான் நல்ல குணம் பலவீனமாகிப் போகிறது. அதாவது ஜனாதிபதி மைத்திரி வரும்போது இருந்த மகிந்தவின் கட்டவுட்டுகள் பிரதமர் ரணில் வரும்போது அகற்றப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு அகற்றப்பட்டால், அங்கு ஜனாதிபதியை விட பிரதமர் அதிகாரம் கூடியவர் என்றாகிவிடும்.

இதேபோல் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான பாதுகாப்பை விட, பிரதமர் ரணிலுக்கான பாதுகாப்பு பலமடங்கு அதிகமாக இருந்தது. அது மட்டுமன்றி யாழ்.செயலகத்திற்கு ரணில் செல்வதற்கு முன்னதாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், ஜனாதிபதி மைத்திரி மிக எளிமையாக யாழ்ப்பாணத்திற்கு வந்து போனார். இத்தகையதொரு நிலைமைப்பாட்டின் அடிப்படையில்தான் வடக்கின் முதலமைச்சரை சந்திக்க மாட்டேன் என்று பிரதமர் ரணில் கடும்பிடியாக நின்றார்.

ஆனால், இப்படி ஒரு விடாப்பிடியை மகிந்த ராஜபக்­ ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர் டி.எம். ஜயரட்னவால் செய்திருக்கமுடியாது. இங்குதான் அதிகாரம் வேறு, நல்ல குணம் வேறு என்பது உணரப்படுகின்றது.

மகிந்தவின் இறுக்கமான போக்கு-கண்டிப்பான நிர்வாகம் என்பவற்றால், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் எவரும் தாம் நினைத்தபாட்டில் செயற்பட முடியவில்லை.

மகிந்த ராஜபக்­வின் இறுக்கம் சரியானதா? என்பதற்கு அப்பால் இப்படியானதொரு இறுக்கம் தேவையாக உள்ளது என்பதே நிலைப்பாடாக உள்ளது.

இன்றுவரை மகிந்த ராஜபக்­வின் ஆட்சி தேவை என்று நினைக்கின்ற அளவில் ஏராளமான சிங்கள மக்கள், அரசியல்வாதிகள் உள்ளனர் எனில், அதன் உள்ளார்ந்தம் மைத்திரியின் நல்ல குணம் ஏனையவர்களால் பலவீனப்படுத்தப்படுகிறது என்பதே பொருளாகும்.

எனவே, வேடம் போட்டால் குலைத்துத்தான் ஆக வேண்டும் என்பது போல ஜனாதிபதி மைத்திரியும் தன்னை ஸ்திரப்படுத்துவது மிகவும் கட்டாயமானது.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila