இதன் போது தங்களது காணிகளை இழந்து தவிக்கும் மக்கள் பல பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் தனது ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தோம். எம்மை அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிந்தவர்கள்.
எங்களுக்கு எங்களது காணிகளில் பயிர் செய்து கடல் தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தோம். எமக்கு என்று நிலம் இருந்தது தற்போது அதை எமது அரசாங்கம் சூறையாடியுள்ளது .
எம்மை கிராமத்தை விட்டு வெளியேற சொன்ன பாதுகாப்பு படையினர் நாம் வெளியேற மறுத்தமைக்கு, எமது வீடுகளை எரித்து பலவந்தமாக வெளியேற்றி இன்றுடன் 6 வருடங்கள் கடந்தும் நாம் எமது சொந்த இடத்துக்கு இன்னும் செல்லவில்லை.
5 கிராமங்கள் உள்ள இந்த இடத்தில் 1000 ஏக்கருக்கு மேல் கடல் பகுதியை இலங்கை படையினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். இதில் அவர்கள் சுற்றுலா துறையை பலப்படுத்தி வருகின்றனர் .
எமது கடல் நிலம் எமக்கு சொந்தம் இல்லை. என்ன அபிவிருத்தி இது ? யாருக்கு நல்லாட்சி எம்மை வெளியேற்றி இவர்கள் இலாபம் அடைகின்றனர் .
எமது கடல் பகுதியில் அதிவேக படகுகள் மற்றும் அலைகள் அதிகமாக உள்ளதால் கடல் படகு விளையாட்டு மிகவும் உகந்த கடலாக உள்ளது. இதனால் தான் எமது நிலங்களை சூறையாடி உள்ளனர் .
இந்த காணி விடயத்தில் பிரதேச செயலகமும் அமைச்சர் தயா கமகேவும் எங்களுக்கு எதிராக உள்ளனர். குறிப்பாக இந்த காணிகளை அபகரிக்கும் எண்ணம் தயா கமகேவுக்கும் உள்ளது.
வெளியிடங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து வேறு இடங்களை கொடுத்து எமது பிரச்சனை தீர்ந்து விட்டது என கூறுகின்றார்.
ஆனால் நாங்கள் பாதையில் நிற்கின்றோம். நாங்கள் வாக்களிக்கும் போது முதல் விடயமாக பாராளுமன்றத்தில் கதைப்பதாக கூறினார்.
ஆனால் இன்று வரைக்கும் எம்மை திரும்பி பார்க்க வில்லை. பல ஆர்ப்பாட்டங்கள் விழிப்புணர்வுகள் உயிர் இழப்புகள் என இதுவரை தியாகம் செய்துள்ளோம்.
எமது உயிர் போனாலும் தொடர்ந்து போராட நாம் தயாராக உள்ளோம். இந்த காணி தொடர்பாக நாம் பல வழக்குகள் தொடுத்துள்ளோம். அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.
ஆனாலும் எம்மால் எமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நீதித்துறைக்கு கூட இப்போது மதிப்பில்லாமல் போயுள்ளது.
காரணம் நாம் சாதாரண மக்கள் என்ற காரணத்தினாலா..? முன்னைய அரசை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் இந்த அரசும் எம்மை கை விட்டு விட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.