‘எழுக தமிழ்’ நடத்தியவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புவாராம் ஞானசாரர்
விக்னேஸ்வரன் உட்பட ‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு போவதற்கு தயாராகவும் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் வாக்குகளால் வடக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் இன்று நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடந்து கொள்கின்றார். இலங்கையின் வரலாற்றையே மாற்றுகின்றார். அத்துடன் அவர் இரண்டாவது பிரபாகரனாக நடந்துகொள்கிறார். எங்கே இந்த நாட்டில் நீதியை அமுல் படுத்துகின்ற கட்டமைப்புகள், எங்கே இந்த நாட்டின் இறையான்மை பற்றி பேசுகின்றவர்கள், நீதிமன்றங்கள், ஜனாதிபதி உட்பட இந்த நல்லாட்சி அமைச்சர்கள் எங்கே..? நீதியை அமுல் படுத்தும் கட்டமைப்புக்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் 30 வருடங்களுக்கும் மேலாக பூசை செய்து மீட்டு எடுத்த இந்த தாய் நாடு இன்னும் ஒரு முறை அதே இடத்திற்கு கொண்டு செல்லும் நிலை. இவர்களது இந்த நடவடிக்கைகளானது வடக்கு கிழக்கை மாத்திரம் அல்ல முழு நாட்டையும் பாதிக்கும் என்ற யதார்த்ததை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். நாங்கள் விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு விக்னேஸ்வரனை சந்திக்க கிடைத்தால் நீங்கள் எல்லோரும் தயாராகுங்கள் தமிழ் நாடுக்கு போவதற்கு என சொல்லுவேன். இப்படி நான் சொல்ல வேண்டுமா..? இப்படி நடக்க வேண்டுமா..? சிங்கள மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அரசியல் வாதிகள் அமைதியாக இருந்ததற்கு நாங்கள் அமைதியாக இருக்க போவதில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.
Add Comments