காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.
காணாமல் போனோரின் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகிலும் கவனயீர்ப்புப் போராட்டமும் உணவு தவிர்ப்புப் போராட்டமும் நடாத்தப்பட்டு வருகின்றது.
மேலும் முள்ளிவாய்க்காலில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியும் நாளை நல்லூர் ஆலயத்தை வந்தடைந்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிள்ளைகளைக் காணாது தவிக்கும் தாயின் அவலத்திற்கு நீதி இல்லையா? நீதியான சர்வதேச போர்க்குற்ற விசாரணை உடனடியாக வேண்டும் போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.