முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல்

1முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று பதவி உயர்த்தப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் தலைமை அலுவலக மைதானத்தில் இடம்பெற்றது. மேற்கு நாடுகளின் தூதுவர்கள் பலர் இந்த நிகழ்வைப் புறக்கணித்தது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொன்சேகா பீல்ட் மாஷலாக பதவியேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஶ்ரீபவன் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்த போதிலும், மேற்கு நாடுகளின் தூதுவர்கள் இதனைப் புறக்கணிக்கணித்தனர். இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டை முன்வைத்த மேற்கு நாடுகளின் தூதுவர்களே இன்றைய நிகழ்வை புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் நிகழ்வில் இருந்து விலகி இருக்க கொழும்பிலுள்ள  பல முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கியிருக்க, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள், தூதரக தலைமை அதிகாரிகள் ஏற்கனவே தீர்மானித்திருந்தனர்.
தற்போதைய அமெரிக்கத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர் பதில் தூதுவராகவே பணியாற்றுவதாகவும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக தலைமை அதிகாரி இந்த நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என தூதரக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.
வெறுமையான தூதுவர்களின் ஆசனங்கள்
வெறுமையான தூதுவர்களின் ஆசனங்கள்
அதேவேளை, கொழும்பிலுள்ள ஜேர்மனித் தூதுவரும், இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர் கொழும்புக்கு வெளியே சென்றுள்ளதாகவும், ஜேர்மனி தூதரக ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார். கொழும்புக்கான பிரான்ஸ் தூதுவர் தற்போது நாட்டில் இல்லை என்றும், எனவே அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை எனத் பிரான்ஸ் தூதரக ஊடக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடுகளின் தூதரக அதிகாரிகளே இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கியிருந்தனர் என்பதும் கவிக்கத்தக்கது. அதேவேளை, சில நாடுகளின் தூதரகங்கள், இந்த நிகழ்வுக்கு இரண்டாம் நிலை அதிகாரிகளை அனுப்பியிருந்தன.
கெளரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார். பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின்கீழ் பணியாற்றுபவர் அல்லர். பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கொண்டிருக்கும் உரிமைகளைக் கொண்டிருப்பார்.
ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடும் சுதந்திரமும் அவருக்கு இருக்கும். அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்குள்ள அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார். பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சம்பளம் வழங்கப்படும். வாழ்நாள் முழுவதற்கும் அவருக்கான பணியகமும், அதற்கான பணியாளர்களும் வழங்கப்படும். பீல்ட் மார்ஷல் ஒருவர் உயிரிழந்தால், இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதுடன் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்படும்.
உத்தியோகபூர்வ வதிவிடம், போக்குவரத்து வசதிகள் என்பனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும். பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவும் அதிகாரபூர்வ வதிவிடமும் வழங்கப்படும் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila