இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டினால் அவர்கள் சுடப்படுவார்கள் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கூறியுள்ளார்.
இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது இப்போது கடுமையடைந்துள்ளது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நுழைவால், இலங்கைக் கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இவ்வாறு பிரதமர் ரணில் கூறியமை இந்தியாவைக் கடுமையாகப் பாதித்திருந்தது. எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள் என்ற கடும் சொல் பிரதமர் ரணிலிடம் இருந்து வெளிவரும் என இந்திய மத்திய அரசு ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இருந்தும் ரணில் அப்படியயாரு கடும் சொல்லை சொல்லிவிட்டார்.
மகிந்த ராஜபக் ஜனாதிபதியாக இருந்தகாலத்திலும் எல்லை தாண்டும் பிரச்சினை இருந்ததாயினும் மகிந்த ராஜபக் இப்படியயாரு கடும் சொல்லைக் கூறியதே இல்லை.
எல்லை தாண்டினால் சுடுவோம் என்ற சொற் பதத்தை மகிந்த ராஜபக்விடமிருந்து இந்தியா எதிர் பார்த்திருந்ததாயினும் எதிர்பார்த்தவர் அது பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க, யாரை எதிர்பார்த்திருக்க வில்லையோ, அவர் சுடுவோம் என்று சூளுரைத்து விட்டார்.
பரவாயில்லை. பிரதமர் பதவி கிடைத்த பேருவகையில் வெகுளித்தனமாகக் கதைக்கும் நிலைமை இருப்பது வழக்கம் என்றெண்ணி ரணிலின் கடும் சொல் குறித்து இந்தியா மெளனமாக இருந்தது.
இந் நிலையில் இலங்கையின் கடல் எல்லையை தாண்டும் இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள் என மீண்டும் பிரதமர் ரணில் திருவாய் மலர்ந்தார்.
இரண்டாவது தடவையும் ரணில் சுடுவோம் என்று கூறியமை இந்தியாவுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்திற்று. அதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரியின் கருத்து நிலை அறியாமல் செயற்படுகிறார் என்ற கருத்தும் இவ்வாறு செயற்படுவதற்குள் ஏதோவொரு உள் நோக்கம் உண்டு என்ற கருத்தும் உள்ளது.
அதாவது இந்தியாவோடு பகைமையை ஏற்படுத்திவிட்டால் இனப்பிரச்சினை தீர்வில் இந்தியத் தலையீட்டைத் தவிர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் நினைப்பதன் காரணமாகவே இப்படியயாரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார் என்று கருதவும் இடம் உண்டு.
அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்கவுடனான நட்பில் ரணில் இன்னமும் நெருக்கமாகவே இருக்கிறார். மகிந்த குழுமம் அமைக்கும் வியூகத்திற்கு நல்வினை செய்யும் பொருட்டே ரணில் இந்தியா மீது வலிந்து முரண்படுகிறார் என்றால், அதுவும் பொருந்தும் என்று கூறுவதில் தவறில்லை.
எதுவாயினும் சுடுவோம் என்ற வார்த்தையை இலங்கையில் இருந்து சுட்டுத்தள்ளுவது கட்டாயமானதாகும்.