அதேவேளை, தன்னுடைய தந்தையின் மரண வாக்கு மூலத்தில், தன்னைச் சுட்டவர்கள் யார் என்பதைத் தெரிவித்திருந்த போதும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, இதுவரை எதுவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் முன்பாக பிரசன்னமாகி, இன்று சாட்சியமளிக்கும் போதே, சந்திரநேருவின் புதல்வரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான மூன்றாம் நாள் அமர்வு இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ஆணைக்குழுவில் தவிசாளர் மெக்ஸ்வெல் பி.பரணகம மற்றும் ஆணையாளர் மனோகரி ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமர்வில் கலந்து கொண்டு, தனது தந்தையின் மரணம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சாட்சியமளித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனது தந்தை சந்திரநேரு 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போதைய அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் அப்போது சமாதானம் நிலவியது. என்னுடைய தந்தையார், பொலநறுவையிலிருந்து மட்டக்களப்புக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பிள்ளையாரடி எனும் இடத்தில் வைத்து, கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரால் சுடப்பட்டார்.
தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் நேர்ந்தால், அதற்கு கருணா, பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரே பொறுப்பாவார்கள் என்று, ஏற்கனவே எனது தந்தை என்னிடம் கூறியிருந்தார். அப்போது நான் லண்டனில் இருந்தேன். எனது தந்தை சுடப்படும்போது, அவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸாரும், அந்த சம்பவத்தில் காயமடைந்தார்கள். ஆயினும், அவர்கள் இப்போதும் உயிருடன் உள்ளார்கள். அந்தப் பொலிஸார் வேறு வாகனத்தில் பயணித்திருந்தார்கள். ஆனால், எனது தந்தையுடன் ஒரே வாகனத்தில் பயணித்த அனைவரும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள்.
சுடப்பட்ட நிலையில் பொலநறுவை வைத்தியசாலையில் எனது தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், என்னுடைய தந்தையிடம் வெலிக்கந்தைப் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர். அந்த வாக்கு மூலத்தில், தன்னைச் சுட்டவர்கள் யார் என்பதை எனது தந்தை கூறியிருந்தார். ஆயினும், எனது தந்தையைச் சுட்டவர்களுக்கு எதிராக, இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனது தந்தையின் மரணம் தொடர்பில், எனக்கு நீதி வேண்டும்’ என்றார்.
|