வடக்கு மாகாணசபைக்கு புறம்பாக, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும் கெட்ட எண்ணத்துடனும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பில், ஆய்வை நடத்திய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை, அதனைச் செய்தவர்கள் ஏன் பகிரங்கமாக வெளியிடத் தயங்குகின்றனர்? இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், மாகாணசபையில் கேள்வி எழுப்பினார்.
வடக்கு மாகாண சபையின் 27 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன் போது சுன்னாகம் குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் நிலத்தடி நீரூடன் பெற்றோலியக் கழிவுகள், மாசாக கலந்திருப்பதாக எழுந்த ஓர் இடர் நிலை காரணமாக பல்வேறு கருத்துக்கள், வழக்குகள், ஆய்வுகள், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக வடக்கு மாகாண சபை பெருமளவு நிதியை செலவழித்துள்ளது. மாகாணசபை தன்னு டைய சுகாதார விவசாய அமைச்சுக்களை ஒருங்கிணைத்து, தூய குடிதண்ணீருக்கான செயலணியை அமைத்துள்ளது. அதனூடாக இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய குடிதண்ணீரை வழங்க வேண்டிய பொறுப்பு மாகாண அரசுக்கு உள்ளது.
அதனை மாகாண அரசு மேற் கொண்டு வருகின்றது. அத்துடன் இந்த இடர் மாசு தொடர்பில், ஆய்வுகள் மேற்கொண்டு மக்களுக்கு சரியான தகவல் வழங்கி மக்களின் பீதியைப் போக்க வேண்டியுள்ளது.
தூய செயலணி பல மில்லியன் செலவு செய்து ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றது. இதற்குப் புறம்பாக, வேறு ஒரு குழுவினரும், பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.
எந்த அடிப்படையில் அந்தப் பரிசோதனையை அவர்கள் முன்னெடுத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அதைச் செய்தார்களா? வடக்கு மாகாண அரசு அதனைச் செய்ய சொல்லியதா? அல்லது அவர்கள் பொது அமைப்பா?. எஸ்.ரி.எஸ். லங்கா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், தனது பல் ஆய்வு கூட சூழல் சேவைகள் என்ற பிரிவில் இந்த நீர் பிரச்சினை சம்பந்தமாக ஆய்வு செய்திருப்ப தாக ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்த நிறுவனம் ஆய்வை மேற் கொள்வதற்கு யார் ஏற்பாடு செய்தார்கள்? இந்தப் பிரச்சினையை கையாளும் முறைப்படியான அமைப்புக்களை தொடர்பு கொள்ளாமல் தன்னிச்சையாக, இந்த ஆய்வை மேற்கொண்டதன் நோக்கம் என்ன? இவர்கள் யாருடன் தொடர் புடையவர்கள்? நீரூடன் தொடர்புடைய என்ன வியாபாரம் செய்கின்றார்கள்?
இந்த விடயங்கள் ஆராயப்படாமல், நாங்கள் ஒரு திசையில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.
இன்னுமொரு திசையில் வடக்கு மாகாணசபையின் ஆய்வை செல்லுபடியில்லாமல் செய்து, பீதியை வெளியிடும் வகையில், கெட்ட எண்ணத்துடன் இவ்வாறான பிழையான ஆய்வுகள் விசமத்தனத்துடன் செய்யப்படுகின்றனவா என்று ஆராய வேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கு உண்டு.
அவர்கள் 95 கிணறுகளில் ஆய்வு செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 28 கிணறுகளிலும், 11 ஆம் திகதி ஓர் இடத்தில் 17 கிணறுகளிலும், இன்னொரு இடத்தில் 35 கிணறுகளிலும், வேறொரு இடத்தில் 15 கிணறுகளிலும் குடிதண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் 10 ஆம் திகதி எடுக்கப்பட்ட 28 கிணறுகளில், 6 கிணறுகளில் மாத்திரம் எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஏனைய கிணறுகளில் எதுவுமில்லை. மேலும் எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகள் இருக்கும் கிணறுகள் பொதுக்கிணறுகள்.
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கிணற்றில் 3 மில்லி கிராம் கழிவும், மல்லாகம் வீரபத்திரர் கோவிலடிப் பகுதியில் குழாய்க் கிணற்றில் 6 மில்லி கிராம் கழிவும், பாஸ்கரலிங்கம் என்பவரது வீட்டில் (ஜே/239) கிணற்றில் 4 மில்லி கிராம் கழிவும், இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாஸ் கரலிங்கம் என்பவர் தனிப்பட்ட ரீதியில் விசாரித்த போது அவர், பொதுச் சுகாதார பரிசோதகர் என்பது அறியக் கிடைத்தது. இருப்பினும் உறுதிப்படுத்த முடியவில்லை.
95 கிணறுகளில் 7 கிணறுகள் தவிர்ந்த ஏனைய கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. ஆனால் பரிசோதனையைச் செய்தவர்கள், என்ன நோக்கத்துக்காக செய்தார்கள்?, ஏன் பரிசோதனை முடிவை வெளியிடவில்லை?, அவர்கள் எதிர்பார்த்த முடிவு வரவில்லை என்பதனால், இதனை வெளியிடவில்லையா?
இந்த ஆய்வை செய்த நிறுவனத்திடம், வடக்கு மாகாணசபை விவரங்களைக் கோர வேண்டும். அவர்கள் இந்தப் பரிசோதனைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் என்ன? பரிசோதனை முறைகள் என்ன? என்பது தொடர்பிலும் விவரம் பெறவேண்டும். மேலும், இந்த ஆய்வைச் செய்தவர்கள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும்.
ஆய்வின் போது எண்ணெய், கிறீஸுக்கு அப்பால் எந்தச் சோதனைகளையும் செய்ய முடியவில்லை. நைத்திரேற் மற்றும் பார உலோகங்கள் உள்ளனவா இல்லையா என்பது தொடர்பில் சோதனை செய்வதற்கு போதிய நீர் இல்லை என்று பரிசோதனை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் கேடு கெட்ட அரசியல் வியாபாரம் செய்யத் துணிபவர்களை அடையாளம் கண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.