அதிரடிப்படையினர் மகனைப் பெற்றோல் ஊற்றி எரித்தனர்! -ஆணைக்குழு முன் தாய் சாட்சியம்


கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நாங்கள் இருந்த முகாமுக்கு வந்த இராணுவத்தினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். ஆனால் இதுவரை
அவரை நாம் தேடாத இடமே இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்று ஆணைக்குழு எமக்கு தெரியப்படுத்த முயற்சி செய்யவேண்டும் என்று அக்கரைப்பற்று சிங்கள மகா வித்தியாலய வீதியைச் சேர்ந்த க.சின்னத்தங்கம்மா தெரிவித்தார்.
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நாங்கள் இருந்த முகாமுக்கு வந்த இராணுவத்தினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். ஆனால் இதுவரை அவரை நாம் தேடாத இடமே இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்று ஆணைக்குழு எமக்கு தெரியப்படுத்த முயற்சி செய்யவேண்டும் என்று அக்கரைப்பற்று சிங்கள மகா வித்தியாலய வீதியைச் சேர்ந்த க.சின்னத்தங்கம்மா தெரிவித்தார்.
           
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அமர்வு நேற்று இரண்டாவது நாளாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்றைய அமர்வில் பெருந்தொகையான தமிழ் முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
ஆலயடிவேம்பு பகுதியை சேர்ந்த வீ.விமலாதேவி சாட்சியமளிக்கையில்-
அக்கரைப்பற்று வட்டமடுப் பிரதேசத்தில் தான் வளர்த்து வந்த மாடுகளைத் தேடிச் சென்ற எனது கணவர் தம்பிராசாவிடம் சாகாமம் பிரதேசத்தில் முகாம்களை அமைத்து செயற்பட்டு வந்த இராணுவத்தினர் அடையாள அட்டையினை வாங்கியதாக அவருடன் சென்றவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர் தேடிச் சென்ற மாடுகள் வந்தன. ஆனால் மாடுகளைத் தேடிச் சென்றவர் இதுவரை வீடு வந்து சேரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த எஸ்.கண்மணி. சாட்சிமளிக்கையில்-
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி விவசாய அறுவடையின் நிமித்தம் கூலித் தொழிலுக்காகச் சென்ற எனது 19 வயது மகன் செல்லத்துரை ராஜதுரை பொத்தானைக்குச் சென்றார். அவ்வேளையில் விேசட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அப்பகுதியில் சென்றவர்களை அன்றைய தினம் சுற்றி வளைத்து பிடித்ததாக அயலவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதனைப் பார்க்க நான் ஓடோடிச் சென்றபோது அதிரடிப்படையினரின் முகாமில் பெற்றோல் ஊற்றி சிலரை எரித்துக் கொண்டிருந்தனர். அதில் எனது மகனும் எரிந்து கொண்டிருக்கிறார் என்று யாரோ ஒருவர் சொல்லக்கேட்டு தலை சுற்றி மயக்கமடைந்தேன். என் உயிரே போனது போல் இருந்தது என தேம்பி அழுதவாறு கூறினார்.
அக்கரைப்பற்று சிங்கள மகா வித்தியாலய வீதியைச் சேர்ந்த க.சின்னத்தங்கம்மா சாட்சியமளிக்கையில்-
17 வயதுடைய பாடசாலையில் அதீத திறமை கொண்ட எனது மகன் சிவானந்தம் செல்வராஜ் பாடசாலை விட்டு வீடு வந்தபோது இராணுவத்தினர் எமது பிரதேசத்தினை சுற்றி வளைத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பயம் கொண்ட நாம் உடனடியாக திருக்கோவிலில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமொன்றிற்குச் சென்று தஞ்சமடைந்தோம். 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆந் திகதி நாங்கள் இருந்த முகாமுக்கு வந்த இராணுவத்தினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். ஆனால் இதுவரை அவரை நாம் தேடாத இடமே இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்று ஆணைக்குழு எமக்கு தெரியப்படுத்த முயற்சி செய்யவேண்டும் என்று கண்ணீர் மல்க சாட்சியமளித்தார் .
அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகம்மது அலிமா நூறு நிஷா கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கையில்-
1990ஆம் ஆண்டு விவசாய அறுவடைக்காகச் 20 பேருடன் சென்ற எனது கணவன் காதர் வெல்லை வெள்ளத்தம்பி வயல் வெளியில் நின்றபோது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அவர்களைப் பிடித்து கதறக் கதற உழவு இயந்திரப் பெட்டியொன்றில் ஏற்றிச் சென்றதை கண்ட எனது உறவினர் எம்மிடம் வந்து சொன்னார். உடனே நாம் சம்பந்தப்பட்ட இடத்தினை நோக்கி ஓடிச் சென்று பார்த்தோம். எங்குமே அவர்கள் சென்ற தடயங்களே தென்படவில்லை. எல்லா இடங்களிலும் தேடியலைந்தோம். ஆனால் இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாமலே போய்விட்டது.
வருமானமே இல்லாத எனக்கு மூன்று பிள்ளைகள். கணவர் இல்லாமல் போனபோது எனது கடைசிப்பிள்ளையான ஆறு மாதக் கைக்குழந்தையுடன்தான் நானிருந்தேன். அவர்களில் இரு பெண்களைகளை ஏதோ ஒரு வகையில் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். கணவர் இல்லாமல் போன செய்தி கேட்ட எனது மூன்றாவது மகன் அதிர்ச்சியுற்று தற்போது அங்கவீனராக உள்ளார். அவரைக் காணும்போதெல்லாம் எனது கணவனின் முகம் வந்து செல்கின்றது என்றார்.
நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 21 முறைப்பாட்டாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 24 முறைப்பாட்டாளர்களுக்கும், இறக்காமம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 16 முறைப்பாட்டாளர்களுக்குமாக 61 பேருக்கு விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila