
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத் தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் எனினும் அதில் எவ்வித உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தான் வாழ்த்துத் தெரிவித்த விடயத்தை ஏனையவர்கள் வெவ்வேறு அர்த்தங்களில் பார்ப்பதற்கு தான் பொறுப்புக்கூற முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் பிரச்சிளைகளுக்கு தீர்வுகாண தாமே முயலவேண்டுமெனவும், மற்றவர்கள் அல்லவெனவும் எனினும் உலகம் சுருங்கியுள்ளதால் ஒவ்வொரு விடயமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தீர்வுத் திட்டமொன்றை வழங்குவாரென தான் நம்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமது நோக்கம் ஒன்றுபட்ட நாட்டிற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்பதே தவிர நாடு பிளவுபட வேண்டுமென்பது அல்லவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமெனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.