ஒரு புத்த துறவியின் வழிப்படுத்தலுடன் சிங்கள கிராமத்து மக்கள் பஸ் வண்டிகளில் வடபகுதிக்கு சுற்றுலா வருகின்றனர்.
வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வெளியிடத்தில் சமைத்து ஒற்றுமையாக இருந்து உண்டு மிக்க மகிழ்வுடன் தமது சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றனர்.
ஒரு கிராமத்து சிங்கள மக்கள் தங்கள் உறவுகள், அயல்வீடுகள், சுற்றம் என ஒன்று சேர்ந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு ஒரு இடத்தில் இருந்து சமைத்து எல்லோரும் ஒன்றாகக் கூடி உண்டு மகிழ்வது போல எங்களால் செய்ய முடியுமா?
அவ்வாறு ஊர் கூடி சுற்றுலாச் சென்றிருக்கிறோமா? இப்படி கேள்வி எழுப்பினார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்.
கிராம சேவையாளர் ஒருவரின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்போந்த கருத்தைத் தெரிவித்த பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்,
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ்வாறான ஒற்றுமை நிலவுமாக இருந்தால் எங்கள் கிராமத்து மக்களும் ஒன்றுகூடி ஒற்றுமையாக பயணிக்க முடியும் என்றார்.
இவ்வாறு அவர் கூறியபோது நம் இதயம் சற்றுக் கனத்துக் கொண்டது. எங்களிடம் ஏன் அப்படியொரு ஒற்றுமை இல்லாமல் போனது.
உண்மையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் அல்லவா பலத்த ஒற்றுமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். இருந்தும் எங்களிடம் அந்த ஒற்றுமை இல்லாமல் போனமை மிகப்பெரும் துரதிர்ஷ்டம்.
எங்கள் பகுதிகளில் உள்ள சாதாரண சனசமூக நிலையம் முதல் ஆலயங்கள், பொது அமைப்புகள், அரச நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பிலும் கருத்து முரண்பாடுகளும் சச்சரவுகளுமே தலைவிரித்து ஆடுகின்றன.
எங்கள் மக்களை ஒற்றுமைப்படுத்தி ஊர்கூடி தேர் இழுக்க வைத்த ஆலயங்கள் இன்று பிணக்குற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வேண்டி காத்திருக்கின்றன. இந்நிலைமையில் தமிழ் அரசியல்வாதிகள் தத்தம் தேவை கருதி கன்னை பிரிந்து தமக்குக் கிடைத்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
இதற்கு மேலாக கட்சித் தலைமைப் போட்டி என்பது இனப்பிரச்சினைகான தீர்வை விட மிக முக்கிய விடயமாயிற்று.
இந்நிலையில் தமிழ் மக்களை- ஊர் கிராமங்களை ஒன்று திரட்டி ஓரணியில் வழிப்படுத்த யார் உளர்?
அயலில் இருப்பவர் யார் என்று அறிவதைக் கூட வேலைப்பளு என்று நினைத்து முகநூலில் முகவரியைத் தேடுகின்ற எங்கள் இளம் சமூகத்தில் ஒற்றுமை என்பது இன்னமும் பலவீனமாகவே அமையப்போகிறது.
இத்தகையதோர் ஆபத்தான சூழ்நிலையில்தான் எங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை அவசியமாகிறது.
தமிழினம் என்ற அடையாளத்தின் ஊடாக நாம் ஒன்று சேர மறந்து மறுத்து விடுவோமாயின் எங்கள் எதிர்காலம் மிக மோசமானதாகவே அமையும்.
எனவே ஊர் ஒற்றுமை பற்றி சிந்தித்து செயல் ஆற்றுவோம்.