திருகோணமலையில் சிங்களவர்களின் விவசாய காணி அபகரிப்பைக் கண்டித்து காணி உரிமையாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – கங்குவேலி, படுகாடு, முதலைமடு வயற் பிரதேசங்களிலுள்ள விவசாயிகளே தங்களின் காணி உரிமையை வலியுறுத்தி நேற்று (திங்கட்கிழமை) இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது காணிகளில் பெரும்;பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பிரவேசித்து காணிகளை அபகரிப்பதையும் உரிமை கொண்டாடுவதையும் தடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டகாரர்கள்; வலியுறுத்தியிருந்தனர்.
மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாகக் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘பிரதேச செயலாளரே எமது காணிகளைக் கையப்படுத்தியவர்களுக்கு என்ன நடவடிக்கை ?’ ‘அபகரிக்கப்பட்ட எமது காணிகளைப் பெற்றுத் தாருங்கள்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு கோஸமிட்டிருந்தனர்.
அத்துடன் தமது வயல் காணிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான அத்துமீறல்கள் இடம் பெற்று வருவதாகவும் இது பற்றி பல முறை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதும் தீர்வு எதுவும் கிடைக்காததாலேயே தாங்கள் வேறு வழியின்றி ஆர்ப்பாட்டம் செய்யும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பிரதேச செயலாளர், விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன் ஒரு வார காலத்திற்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
Add Comments