நீண்டகாலத்தின் பின்னர் பலத்த எதிர்பார்ப்புக்களின் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையில் யாப்பை இயற்றுவதென்றும், கட்சியை பதிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டதென்ற தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
ஆனால் அந்தக்கூட்டத்தில் பல அதிர்ச்சிகரமானதும், சுவாரஸ்யமானதுமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. ஊடகங்களில் வெளிவராத அவை பற்றிய முழுமையான விபரங்கள் இவை.
இரா.சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிறீகாந்தா, ஆர்.இராகவன் பொன்றவர்கள் இதில் கலந்து கொண்டனர்
கூட்டம் ஆரம்பத்திலிருந்து முடியும்வரையும் எதிரொலித்து கொண்டிருந்த விடயம்- கூட்டமைப்பை பதிவு செய்யாமலிருப்பதே.
ஒவ்வொரு சம்பவங்களாக குறிப்பிட்டு, கூட்டமைப்பை பதிவு செய்யப்படாமலிருப்பதால் அவை நிகழ்ந்ததாக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின. வழக்கத்தின் கூட்டணியை பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் தமிழரசுக்கட்சியின் போக்கை மற்றக்கட்சிகள் காரசாரமாக விமர்சித்தால் கறாரான எதிர்வினை புரியும் சம்பந்தனும், சுமந்திரனும் மிக அமைதியாக அவற்றை பொறுமையாக அவதானித்த மாற்றத்தை அவதானிக்க முடிந்து.
ஆரம்பத்தில் இந்த மாற்றத்தை புரிந்து கொள்ள சிரமமாக இருந்தாலும், முழு கூட்டத்தையும் தொகுத்து பார்த்ததன் அடிப்படையில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
அதாவது, வடக்கு மாகாணசபை மற்றும் முதல்வர் விக்னேஸ்வரன் தமிழரசுக்கட்சிக்கு சவாலான ஒன்றாக உருவாகி வருவதாக தமிழரசுக்கட்சி தலைமை கருத ஆரம்பித்துள்ளது. நேற்றைய கூட்டத்தை உன்னிப்பாக அவதானித்தபோது இது வெளிப்பட்டது.
வழக்கத்தில் வடக்கு மாகாணசபை மீதும், முதல்வர் மீதும் கூட்டணிகட்சிகள் காரசாரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தும் போது, அவசரகதியில் அவற்றை மறுத்து விக்கியை பிணையெடுப்பதையே முதல் காரியமாக சம்பந்தர் செய்து வந்தார்.
அந்த பிரச்சனையை நான் பார்த்து கொள்கிறேன் என முடிப்பார். ஆனால் நேற்றைய கூட்டத்தில் அந்த பாணி மிஸ்ஸிங்.
வடக்குமாகாணசபை தொடர்பில் குறிப்பாக முதல்வர் பற்றி விமர்சனங்கள் வைக்கப்பட்ட சமயங்களில் அவற்றிற்கு தாராளமாக இடம்கொடுத்ததுடன், அதனை ரசித்துக் கொண்டிருந்தார் சம்பந்தர். சில சமயங்களில், “அப்படியா? அப்படி செய்கிறாரா?” என்றும் கேட்டு வைத்தார்.
அண்மையக காலத்தில் வடக்கு முதல்வர் அதிதீவிர நிலையெடுத்திருப்பதும், கூட்டமைப்பை பதிவு செய்யாவிடில், கூட்டணிக்கட்சிகளும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் விக்கி தலைமையில் கூட்டணியமைப்பதென்ற பேச்சடிபட்டு கொண்டிருப்பதும் தமிழரசுக்கட்சியை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கிறது போலத்தான் தெரிகிறது.
இதன் எதிரொலியாகவே, தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கென யாப்பு உருவாக்கவும், பதிவு செய்யவும் தமிழரசுக்கட்சி உடன்பட்டுள்ளது என ஊகிக்க முடிகிறது. நேற்றைய பதிவு கோரிக்கைகள் அனைத்தையும் தாராளமாக வரவேற்ற சம்பந்தர், மற்ற அனைவரையும் விட தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைய விடக்கூடாதென வார்த்தைக்கு வார்த்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் மிக ஆணித்தரமாக கூறிவிட்டார்கள்- கூட்டமைப்பை பதிவு செய்யாவிடில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் முன்னர் கூட்டமைப்பு உடையலாமென. இதற்கு பதிலளித்த சமயத்திலும், அப்படி நடக்க விடமாட்டேன், கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமென சம்பந்தன் கூறினார்.
இந்த சமயத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாமல் தமிழரசுக்கட்சி இழுத்தடித்து கொண்டு செல்வதையடுத்து, கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாக புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ என்பன இணைந்து யாப்பொன்று தயார் செய்திருந்தன. அதனை தமிழரசுக்கட்சியிடம் ஒப்படைத்து, அது பற்றிய தமிழரசுக்கட்சியின் கருத்துக்களை கலந்துரையாடலாமென கூறியிருந்தார்கள்.
நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கென் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டபோது, சுரேஸ் பிரேமச்சந்திரன் குறுக்கிட்டு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பிற்கு என்ன நடந்தது, அது பற்றி இன்றுவரை பதிலளிக்காமல் இருக்கிறீர்களே என கேட்டார். அப்பொழுது மிக அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்ட சம்பந்தன், “இல்லையே.. அப்படியொரு யாப்பை தரவில்லையே.. அது பற்றி யாரும் பேசவில்லையே” என்றார்.
நேற்றைய கூட்டத்தில் பெரும்பாலும் வாய்மூடி மௌனமாக உட்கார்ந்திருந்த செல்வம் டைக்கலநாதன் இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமே பேசினார். அவர் சொன்னார்- “இல்லை.. நான்தான் உங்களிடம் தந்தேன். பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு வெளியில் வைத்து தந்தேன்” என்றார்.
அதற்கு பதிலளித்த சம்பந்தன்- “அப்படியா.. எனக்கு நினைவில்லை.. அப்படி தந்திருந்தால் வீட்டில்த்தான் கிடக்கும்” என்றார்.
மைத்திரி அரசின் தேசிய நிறைவேற்று சபையில் சம்பந்தன் அங்கம் வகிக்கும் முடிவு, மற்றும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை ஆதரவளிப்பது பற்றிய தீர்மானங்கள் எல்லாம் சம்பந்தன் மற்றும் சுமந்திரனினால் மட்டுமே எடுக்கப்பட்டது என்பதை அங்கு சுட்டிக்காட்டி, அதெல்லாம் ஜனநாயக விரோதமானது, மைத்திரி அரசு பற்றிய மக்களின் விமர்சனங்களிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பால் பதிலளிக்க முடியாது, நீங்கள் இருவருமே பதிலளித்து கொள்ள வேண்டும் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சம்பந்தன்- “மைத்திரியை ஆதரிக்காமல் விட்டிருந்தால் மகிந்த வந்திருப்பார். அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் தெரியும்தானே. மைத்திரி இடதுசாரித்துவ பின்னணியில் வந்தவர். மற்றவர்கள் போல இனவாதியில்லை. அவர் தீர்வொன்று தருவார். ரணிலும் அதேவகையானவர்தான். என்ன, பகிரங்கமாக கதைத்து சிங்கள வாக்குகளை இழக்க விரும்பாமல் உள்ளார்.
இவர்கள் இருவரும் இருக்கும் சமயத்தில் தீர்வை பெறுவதுதான் தமிழர்களிற்கு கடைசி சந்தர்ப்பம். இதனை விட்டால் ஒருபோதும் சந்தர்ப்பம் கிட்டாது. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழலை யாரும் குழப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும்” என்றார்.
மைத்திரியை ஆதரித்ததல்ல, அந்த முடிவு முறைப்படி எடுக்கவில்லையென்பதே பிரச்சனையென்பதை சம்பந்தரிற்கு புரிய வைத்தபோது, அதனை ஏற்றுக் கொண்டார்.
இந்த இடத்தில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் கனடாவில் வழங்கிய செவ்வி பற்றிய காரசாரமான உரையாடல் நடந்தது. அந்த செவ்வியில் கூட்டமைப்பை பதிவு செய்துவிட்டதாக சொல்லவேயில்லையென சுமந்திரன் அடித்து கூறியிருக்கிறார். அந்த செவ்வி இணையங்களில் அனைவராலும் பார்க்கும் விதத்தில் உள்ளது, அதனை இப்பொழது கைத்தொலைபேசியில் தரவிறக்கி உங்களிற்கு காட்டுவதா என கேட்டபொழுது, அதனை மறுத்த சுமந்திரன், “நான் அப்படி சொல்லவேயில்லை. நான் என்ன சொன்னென் என்பது எனக்கு தெரியாதா? கூட்டமைப்பை பதிவு செய்ததாக நான் சொல்லவேயில்லை” என்றார்.
கூட்டமைப்பில் நிலவும் ஜனநாயகமற்ற தன்மைக்கு உதாரணமாக, சுமந்திரனின் பேட்டி மீண்டும் கூட்டிக்காட்டப்பட்டது. அந்த பேட்டியில் சுமந்திரன் கூறியிருந்தார்- கிழக்கு அமைச்சரவை பற்றி நானும், சம்பந்தன் ஐயாவும் பேசி தீர்மானித்து விட்டு, அதன் நியாயத்தை மாவையிடம் கூறி அவரை சம்மதிக்க வைத்தோம்” என.
இதனை குறிப்பிட்டு, கூட்டமைப்பின் ஜனநாயகமற்ற தன்மை சுட்டிக்காட்டப்பட்டபோது, அதனையும் சுமந்திரன் மறுத்தார். அந்த பேட்டியில் தான் அப்படி சொல்லவேயில்லையென்றார்.
இந்த கலந்துரையாடலின் இறுதியில் கூட்டமைப்பை பதிவு செய்வதென்றும், யாப்பை உருவாக்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. சம்பந்தனிடம் கொடுக்கப்பட்ட யாப்பை தேடிக்கண்டுபிடித்து படித்து அது பற்றிய கருத்தை சொல்ல ஒருவாரம் அவகாசம் கேட்டார்.
Add Comments