சிறிலங்கா ஏர்லைன்ஸ் மீது தெரிவிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த மூத்த சட்டத்தரணி ஜே. சி. வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு, அதிர்ச்சியூட்டும் பல மோசடிகள் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுலகத்தின் அறிக்கை கூறுகிறது. சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முந்நாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்ஹ, தனது பதவியை முழுமையாக முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என விசாரணைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. ஒப்பந்தங்கள் முறைகேடாக கையாளப்பட்டமை, தகமையற்றவர்களை பணிக்கமர்த்தப்பட்டமை, மற்றும் விமான சேவையின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டமை என பில்லியன் டொலர்கள் கணக்கில் மோசடி நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் கீழ் சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், புத்தம் புதிய விமானங்களை வாங்கியது உட்பட ஏராளமான செலவுகளை அனாவசியமாக செய்திருந்தது என்றும், ஆனால் குறைவான செலவிலேயே விமான சேவையில் நல்ல விதமான மாற்றங்களை கொண்டுவந்திருக்க முடியும் எனவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விமான சேவையின் முந்நாள் தலைவரும், முந்நாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மைத்துணருமான நிசாந்த விக்ரமசிங்ஹ மீது குற்றவியல் விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி வெலியமுனவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. நிசாந்த பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றை சிறிலங்கா ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி கபில சந்திரசேன, போலி ஆவணங்கள் அடிப்படையில் தந்தார் என்பதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. நுழைவுத் தேர்வில் சித்தி பெறாதவர்கள் பலருக்கு முகாமைத்துவத்தின் தலையீட்டின் பேரில் வேலை வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி சந்திரசேன, அந்தப் பதவிக்கு பொருத்தமற்றவர் என்பதுடன், முறைகேடான வகையில் விமானிகளை பணிக்கமர்த்தியமை உட்பட, விமானப் பணியாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆட்கடத்தல் கும்பலுக்கு உதவியமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் வந்திருக்கவில்லை. |
சிறிலங்கன் ஏர்லைன்சில் அதிர்ச்சியூட்டும் மோசடிகள்! - விசாரணையில் அம்பலம்
Related Post:
Add Comments