மகிந்தவை தோற்கடித்தது குற்றமாக உணரப்படுகிறதா?


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வருவேன் என்பதே மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனமாக இருந்தது.

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை நாட்டின் ஜனநாயகத்திற்குப் பாதகம் என்று உணரப்பட்டதன் காரணமாக மைத்திரியின் தேர்தல் பிரசாரம் பொது மக்கள் மத்தியில் எடுபட்டது எனலாம்.

எனினும் இப்போது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள ஒரு குழப்பமான சூழ்நிலையில், ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை நீக்குவது எந்தளவிற்கு புத்திசாலித்தனமானதென்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்மையான போக்குடையவராக இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு இருக்கக் கூடிய பலமான அதிகாரங்கள் பிரயோசனப்படாமல் உள்ளன. இதைப் பாரதியின் மொழியில் கோரிக்கை அற்றுக் கிடக்கிறது வேரில் பழுத்த பலா என்று கூறலாம்.

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் பிரயோசனப்படுத்தப்படாமல் இருந்தாலும் அந்த அதிகாரபலம் மைத்திரியிடம் உள்ளது என்ற பயம் அவரை எதிர்ப் பவர்களிடம் இருக்கவே செய்கின்றது.

எனினும் அந்த அதிகாரங்களையும் நீக்கிவிட் டால் மைத்திரியின் கதை கந்தலாகிவிடும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

ஏனெனில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மீதான ஒரு அனுதாப அலை தென்பகுதியில் பரவலாக ஏற்பட்டு வருகிறது.

2015 ஜனவரி 8ந் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்­ எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்­ அலரிமாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் ஓ! என்று அழுதனர். தங்கள் தலைவருக்கு ஏற்பட்ட தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு எக்காலத்திலும் தோல்வி ஏற்படாது என்ற நினைப்பிலேயே மகிந்த ராஜபக்­ முன்றாவது தடவையும் ஜனாதிபதியாக வரும் முயற்சியில் இறங்கினார்.

எனினும் அந்த முயற்சி அவருக்குத் தோல்வியாகிப்போக, அது இப்போது தென்பகுதியில் மகிந்த மீதான அனுதாப அலையாக உருமாறி வருகிறது.
தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த மிகவும் புத்திசாலித்தனமாக தனது பிறந்த ஊராகிய அம்பாந்தோட்டைக்குச் சென்றார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மொழியில் இதைக் கூறுவதாயின் வெறுங்கையோடு அம்பாந்தோட்டைபுக்கான் என்று கூறமுடியும்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தங்கள் தலைவன் பதவியிழந்து; தோல்வி எனும் பெரும் அவமானத்தைச் சுமந்து பிறந்த ஊருக்கு வருகிறார் என்ற செய்தியை அம்பாந்தோட்டை மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தலையில் அடித்து தகுமோ!...தகுமோ!... என்று அழுது புரண்டனர்.

மகிந்தவின் தோல்விக்கு அவரோடு கூட இருந்த மைத்திரி காரணமாயிற்றாரே! என்பதும் அவர்களுக்குத் தீராத ஆத்திரத்தை கொடுத்தன.

தன் மீது சிங்கள மக்கள் கொண்டுள்ள ஆதரவை-அனுதாபத்தை தனக்குச் சாதகமாக்க நினைத்த மகிந்த, தமிழர்கள் என்னைத் தோற்கடித்து விட்டனர் என்று கூற, அது முழுச் சிங்கள மக்களிடமும் மகிந்த மீது அனுதாபத்தை ஏற்படுத்திற்று.

நிலைமை இதுவாக இருக்கும்போது ஜனாதிபதி மைத்திரி தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தையும் உடனடியாக நீக்கினால், எல்லாம் அம்போ என்றாகிவிடும்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila