புதிய அரசாங்கத்திடம் செயற்பாடுகள் இல்லை


ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த 50 நாட்களுக்குள் மக்கள் எதிர்பார்த்த மட்டத்திலான செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என இலங்கை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் (Transparency International Sri Lanka) அமைப்பு தெரிவித்துள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தின் கடந்துவிட்ட 50 நாட்களுக்குள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான முன்னேற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 62 வீதமானவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஓரளவு போதுமானதாக உள்ளதென கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 32 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான பொறிமுறைகளை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற முயற்சிகள் குறித்து திருப்தி அடைவதாக 48 வீதமானவர்கள் கருதுகின்றனர்.

இந்த செயற்பாடுகள் குறித்து 43 வீதமானவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானவை என 6 வீதமானவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இலங்கை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நேர்மையான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 43 வீதமானவர்கள் கருதுவதுடன், 15 வீதமானவர்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், 21 வீதமானவர்கள் இந்த விடயம் குறித்து நிலைப்பாடு தெரிவிப்பதற்கு கால அவகாசம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டவாட்சியை நடைமுறைப்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அது போதுமானதாக இல்லை என வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் கருதுவதாக இலங்கை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தவிர, அமைச்சரவையில் ஊழல் புரிந்தவர்கள் இருப்பதாக நூற்றுக்கு 45 வீதமானோர் கூறியுள்ளனர். ஊழல் புரிந்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம், போதுமான அளவு சட்டவாட்சியை நிறுவாமை மற்றும் அமைச்சரவையில் தகுதியானவர்களுக்கு இடமளிக்காமை என்பன கடந்த 50 நாட்களுக்குள் அரசாங்கம் தவறவிட்டுள்ள விடயங்கள் என இலங்கை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila