மகிந்தவின் மாளிகையைப் பார்த்து பிரதமர் ரணில் வாய்பிளந்தது ஏன்?


கீரிமலையில் ஒரு பெரும் மாளிகையை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ கட்டிவித்தார். தானும் தனது குடும்பமும் விரும்புகின்ற போதெல்லாம் வந்த தங்குவதற்கே இப்படி ஒரு மாளிகையை அவர் தோற்றுவித்தார்.

ஒரு சில தடவைகள் மாளிகையில் மகிந்த தங்கியிருந்ததும் உண்டு. கீரிமலையில் அமைக்கப்பட்ட மாளிகையைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்டார். மக்களின் வரிப்பணத்தில், தமிழர்களின் நிலப்பரப்பில் இப்படி ஒரு மாளிகை தேவைதானா? என்பது அவர் உள்ளத்தில் எழுந்த கேள்வி. அதன் காரணமாக மாளியைப் பார்க்க ஜனாதிபதி மைத்திரி மனம் கொள்ளவில்லை.

அதுமட்டுமன்றி அந்த மாளிகையை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகமாக பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி மைத்திரி இணக்கம் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்ட மாளிகை தமிழ் மக்களின் அரச நிர்வாகத்திற்கு பயன்படுத்துவது நல்லது என்ற உயர்ந்த எண்ணத்தில் ஜனாதிபதி மைத்திரி அப்படி ஒரு நினைப்பைக் கொண்டிருந்தார்.

இது ஒரு புறம் இருக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கீரிமலையில் மகிந்த ராஜபக்ஷ அமைத்த மாளிகையை நேரில் சென்று சுற்றிப் பார்த்தார்.

உலகில் உள்ள எந்தக் ஹோட்டல்களும் அதற்கு ஈடாகாது என்று விமர்சனம் செய்துள்ளார். உலகில் உள்ள எந்த நட்சத்திர விடுதிகளும் கீரிமலை மாளிகைக்கு ஈடாகாது என்பதன் ஊடாக, இலங்கையில் -கீரிமலையில் அப்படி ஒரு மாளிகை என்று கூறுவது ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமன்று.

மாறாக, கீரிமலையில் அமைக்கப்பட்ட பெறுமதியான மாளிகை வடக்கு மாகாண சபைக்கு கிடைத்துவிடுமோ என்று ஏக்கம் கொண்ட பிரதமர் ரணில் அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே மேற்போந்த கருத்தை முன்வைத்தார் என்று கூறலாம்.

ஏற்கெனவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை மாளிகையை வடக்கின் முதலமைச்சரிடம் கையளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் அல்லவா? எனவே, அதைத் தடுக்க வேண்டும். அதற்கான ஒரு உபாயமே உலகில் எங்கும் இல்லாத நட்சத்திர ஹோட்டலாக கீரிமலை மாளிகை அமைந்துள்ளது என பிரதமர் ரணில் முன்மொழிந்தார்.

அத்துடன் கீரிமலையில் உள்ள மாளிகையை ஆறு நட்சத்திர விடுதியாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் ரணில் திருவாய் மலர்ந்துள்ளார்.

தமிழர்களின் பயன்பாட்டிற்கு கீரிமலை மாளிகையை வழங்கக் கூடாது என்பதற்காக பிரதமர் ரணில் திட்டம் தீட்டி விட்டார் என்பது புரிகிறது.

ஆக, கீரிமலையில் அமைக்கப்பட்ட மாளிகை தொடர்பில் பிரதமர் ரணில் சிங்கள மக்களுக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்தி விட்டார்.

எனவே, கீரிமலை மாளிகையை வடக்கு மாகாண சபைக்கு ஜனாதிபதி மைத்திரி வழங்க முன்வந்தாலும், அதற்கு சிங்கள மக்களும், சிங்கள அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்பது இப்போது உறுதியாயிற்று.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கீரிமலையில் அமைத்த மாளிகை என்பது வடக்கு மாகாண அரசுக்குச் சொந்தமாகும் போதே அதில் நியாயத்துவம் இருக்க முடியும்.

எனவே, கீரிமலை மாளிகையைப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கின் முதலமைச்சரிடம் கூறிய முதலாவது செய்தி கீரிமலை மாளிகையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.

ஆகவே, மைத்திரி கூறிய முதலாவது வாக்கு காப்பாற்றப்படவேண்டும். இதற்கு எவர் ஊறுவிளை விக்க முற்பட்டாலும் அதனை வெட்டி ஆள்வது தமிழ் அரசியல் தலைமைகளின் கடமை. தமிழர்களின் தாயகத்தில் இப்போது ஆறு நட்சத்திர ஹோட்டல்களுக்கு எந்த அவசியமும் கிடையாது என்பதால், கீரிமலை மாளிகை வடக்கு மாகாணத்தின் சொத்தாகட்டும். இதற்கான முயற்சிகள் காலம் தாழ்த்தப்படாமல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila