
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பாக மேற்கு நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.
அண்மையில் வடக்கு மாகாணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வுகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படாததுடன், வடக்கு மாகாணசபையினரைச் சந்திக்கவும் இல்லை.
இதனால், பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுகளில், வடக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கவில்லை. இந்தநிலையில், முல்லைத்தீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர், தனது கட்சியை வளர்க்க வந்த பிரதமர் பங்கேற்ற நிகழ்வுகளில் தான் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார்.
பிரதமருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் தோன்றியிருக்கும் இந்த முரண்நிலை குறித்து, கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளன. கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட, ஜேர்மனித் தூதுவர் ஜுர்ஜென் மொர்ஹாட், யாழ். ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்த போது, இந்த முரண்பாடுகள் குறித்து வினவியிருந்தார்.
அதுபோல, இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட, இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர், ருபின் மூடியும், இந்த விவகாரம் குறித்து, யாழ். ஆயரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியத் தூதுவர்கள், தன்னிடம், பிரதமருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் தோன்றியுள்ள முரண்பாடுகள் தொடர்பாக விளக்கம் கேட்டதாக, யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.