நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பை சந்திரிகா செய்வாரா?

நல்லிணக்கம் இல்லாவிட்டால் அரசின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் என்பது எதைக் குறிக்கிறது என்ற தெளிவான வரையறையை சிங்களத் தலைமைகள் புரிந்துள்ளனவா? என்பது சந்தேகத்துக்குரியது.
இலங்கையில் இப்போது தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய அரசு மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்து நிலையும் உண்டு.
இலங்கையில் தேசிய அரசை அமைப்பதென்பது சாத்தியப்படாத விடயம் என எண்ணப்பட்டிருந்த போதிலும் இப்போது அது சாத்தியமாகியுள்ளது.

தேசிய அரசு என்பதில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பங்கேற்கவில்லையாயினும் கூட்டமைப்பு ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியாக இருப்பதன் காரணமாக தேசிய அரசு அமைவதில் கூட்டமைப்பின் வகிபங் கும் உண்டு என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதிலேயே நல்லிணக்கம் ஏற்பட முடியும் என்பது இங்கு தெளிவாகிறது. தனித்து சிங்களக் கட்சி கள் சந்தர்ப்பவசமாக ஒன்றிணைந்து தேசிய அரசை அமைத்து விடுவதன் மூலம் நல்லிணக்கம் ஏற்பட்டு விடாது.

மாறாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலமே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இங்கு வாழும் சகல இனங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது என்ற பிரசாரத்தை தேசிய அரசு முன்னெடுப்பது அவசியம். இதைச் செய்யாத விடத்து தேசிய அரசு அமைந்து விட்டது எனப் பெருமிதம் கொள்வதால் எந்தப்பயனும் ஏற்படமாட்டா.
மாறாக பேரினவாதம் ஒழிக்கப்படுவதுடன்  இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து நிலை தென்பகுதியில் இருந்து வலியுறுத் தப்படுவதாக நிலைமை மாற்றியமைக்கப்படவேண்டும்.  இதன்போதே நல்லிணக்கம் என்பது சாத்திய மாகும். எனினும் தென்பகுதி இன்று வரை தமிழர்க ளின் பிரச்சினையை உணர்ந்து கொண்டதாகவோ, உள்வாங்கியதாகவோ தெரியவில்லை.

மாறாக மகிந்த ராஜபக்­ எந்தத் தவறு செய்தா லும் அதுபற்றிப் பரவாயில்லை. அவரை மீண்டும் நாட்டின் தலைவர் ஆக்க வேண்டும் என்பதில் இப் போது அமைச்சர்களாக இருக்கின்ற பலர் உறுதியாக உள்ளனர்.

புதிய அரசின் தகவலின்படி, கோடிக்கணக்கான பணம் முன்னைய அரசால் துஷ்பிரயோகம் செய் யப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.  அரச நிதியில் நடக்கும் மோசடிகள் ராஜதுரோகத்திற்குரிய குற்றத்தைக் கொண்டவை.

நிலைமை இதுவாக இருக்கின்ற போதிலும் மகிந்த ராஜபக்­வின் ஆட்சியே இந்த நாட்டில் பெளத்த சிங்கள ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் என்ற மன நிலை இருக்கும் வரை சந்திரிகா கூறும் நல்லிணக் கம் என்பது ஒருபோதும் சாத்தியப்படமாட்டாது.
ஆக, தேசிய அரசின் முதற்பணி தேசிய ஒற்றுமையைக் கட்டிக்காப்பதாகும். தேசிய ஒற்றுமை கட்டிக் காக்கப்படவேண்டும் எனில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு முன்னதாக இலங்கை எல்லா இனமக்களுக்குமானது என்ற பிரசாரம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ஒலிப்பது அவசியம். இந்தப் பணியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்னின்று செய்வாராயின் அவர் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கம் வெகு தூரத்தில் இல்லை.     
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila