பல கோடி ரூபாய் பெறுமதியான நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுடைய அரச காணியினை மோசடியான முறையில் தற்போதைய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கையகப்படுத்தியுள்ளதை பொது மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு, வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அரச காணி துஸ்பிரையோகம், மற்றும் மணல் அகழ்வு, காட்டு மரங்கள் வெட்டுதல் ஆகியவற்றுக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதி வழங்கியமை தொடர்பில் பாதீக்கப்பட்ட மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆகியோருக்கு பல முறைப்பாடுகளை அண்மையில் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி (24-03-2015) செவ்வாய்க்கிழமை உள் நாட்டு அலுவல்கள் அமைச்சினை சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் அடம்பம் நகரில் உள்ள மாந்தை மேற்கு பிரதேசத்திற்குச் சென்று குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் மாணிக்க வாசகர் சிறிஸ் கந்தகுமாரிடம் (அன்ரன்) விசாரனைகளை நடத்தியதுடன் அவரிடம் இவ்விடையங்கள் தொடர்பில் வாக்கு மூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.
பின்னார் குறித்த அதிகாரிகள் அன்றைய தினம் பிற்பகல் பாலியாறு,வெள்ளாங்குளம் பகுதிகளுக்குச் சென்று பொது மக்களிடம் விசாரனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தேவன் பிட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 பொது மக்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரினால் பாலியாறு கிராம சேவையாளர் பிரிவில் உரிய முறையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் விஸ்தீரனமுள்ள காணிகளை வெள்ளாங்குளம் பகுதியில் வசிக்கும் பொது மக்களின் உறுதியினை பயண்படுத்தி தற்போதைய மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் அபகரித்துள்ளதை பொது மக்கள் உரிய ஆதாரங்களுடன் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் குறித்த 50 ஏக்கர் அரச காணியினையும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் தனது நெருங்கிய நண்பரான தற்போது வெள்ளாங்குளம் குடும்பஸ்தர் நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதாகி தற்போது பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள முன்னைய வெள்ளாங்குளம் கிராம சேவையாளர் சிவநேசனின் மனைவி சுபாசினி தேவி என்பவரின் பெயரில் ஆவணங்களை தயார் படுத்தியுள்ளதையும் பின்னர் குறித்த அரச காணியினை துப்பரவு செய்து அதில் நெற்செய்கையினை மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டினர்.
மேலும் மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அருகாமையில் உள்ள அரச காணியில் சுமார் 4 ஏக்கரை தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 01 ஏக்கர் வீதம் அனுமதிப்பத்திரம் மூலம் வழங்கியுள்ளதாகவும், குறித்த 04 பேரில் இளைய தம்பி மாணிக்கவாசகர் என்பவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரின் தந்தை எனவும் பொது மக்களினால் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் தற்போது தென்னை மரங்கள் பெருமளவு செய்கை பண்ணப்பட்டு அது தென்னந்தோட்டமாக மாறியுள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெள்ளாங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குற்பட்ட வெள்ளாங்குளம்,மல்லாவி,மாங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அரச காணியின் ஒரு பகுதியினை வெள்ளாங்குளம்,கனேசபுரம் (அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முன்னால் புலி உறுப்பினர் நகுலேஸ்வரனின் கிராமம்) மக்களுக்கு தலா 01 ஏக்கர் வீதம் வழங்குவதற்கு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்ததாகவும், குறித்த காணி விநியோகம் தொடர்பில் வெள்ளாங்குளம் கனேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 பேரிடம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரின் பணிப்பின் பேரில் அப்போதைய வெள்ளாங்குளம் கிராம சேவையாளர் சிவநேசன் தலா 5 ஆயிரம் ரூபாய் (5.000-00) வீதம் அறவிட்டதாகவும்,எனினும் குறித்த காணி கிராம மக்களுக்கு வழங்கப்படாது பிரதேச செயலாளரினால் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வருகை தந்த அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பொது மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வெள்ளாங்குளத்தில் வசிக்கும் பிறிதொரு நபரின் உறுதியொன்றினை அடிப்படையாக வைத்து குறித்த நாமயன் குளம் என அழைக்கப்படும் பெரும் மதிப்புடைய அரச காணியினை தனது உறவினர்களான நல்லையா வரதலட்சுமி, கருனாகரன் மற்றும் தனது தந்தை இளையதம்பி மாணிக்கவாசகர் ஆகியோறின் பெயர்களில் அபகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் பணத்தினை பெற்றுக்கொண்டு காணியினையும் வழங்காது பிரதேச செயலாளரினாலும், அவரின் கும்பலினாலும் கடும் ஏமாற்றத்திற்கு உற்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் கனேசபுரத்தில் வதியும் பொது மக்கள் கடும் சீற்றமடைந்த நிலையில் இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும், மக்களின் இந்த நடவடிக்கைக்கு தனது ஆதரவினை வழங்கி பிரதேச செயலாளரின் துஸ்பிரையோக நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த வெள்ளாங்குளம் கனேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த முன்னால் புலி உறுப்பினரான நகுலேஸ்வரன் இத்தருனத்திலேயே பாடுகொலை செய்யப்பட்டதையும் குறித்த சம்பவம் தொடர்பிலேயே வெள்ளாங்குளம் கிராம சேவையாளரும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரின் நண்பருமான சிவநேசன் கைது செய்யப்பட்டதையும் மக்கள் மேற்படி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினைகள்,மோசடிகள் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் மக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.