
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே, வட மாகாண முதலமைச்சர் எழுத்து மூலமாக இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினரொருவர் மூலமாக சிதம்பரபுரம் மக்களின் தலைவர் பஞ்சலிங்கத்திடம் ஒப்படைத்துள்ள இக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவ் விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நீங்கள் தற்போது வசிக்கும் காணிகள் உங்களுக்கே பிரித்து வழங்குவது என முடிவெடுக்கப்பட்டதுடன் இவ் விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடனும் கலந்துரையாடப்பட்டது.
இணைத்தலைவராக இருந்த ரிசாட் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டதையடுத்து விரைவில் உங்கள் காணிகள் உங்களுக்கு பிரித்து கொடுக்க ஆவண செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.