என்னை நோக்கி ஓடிவாருங்கள் என மக்களை அழைக்கின்றார் ரணில்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்களை தன்னை நோக்கி ஓடி வரும்படி அழைப்பதைப்போல இருப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 28வது அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை ஒன்றின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
மாகாணசபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் வவுனியா வடக்கு வலயத்தை கஷ்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தமாறும் முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை கஷ்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியிருப்பதனால் பிரதமரிடம் வவுனியா வடக்கு கல்வி வலயத்தையும் பிரகடனப்படுத்தக் கோரும், பிரேரணை ஒன்றினை மாகாணசபையின் 28வது அமர்வில் முன்மொழிந்திருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்களான விந்தன், சயந்தன் மற்றும் கஜதீபன், அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோர் முன்னதாகவே வடமாகாணசபை என்ற மாகாண அரசு உள்ளது.
எனவே அவர்களுடைய அதிகார வரம்புக்குள் வந்து, அவர்களுடைய கருத்துக்களை கேட்காமல் அவர்களுடைய அதிகார வரம்பை மீறும் வகையில் பிரதமர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை கஷ்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியமை தவறு.
எனவே இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். அவர் நேர்மையானவராக இருந்தால் அவர் மாகாண கல்வியமைச்சுக்கு ஊடாக, அந்தவிடயத்தை செய்திருக்கவேண்டும்.
முன்னதாக இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தின் ஊடாக மகாவலி கங்கையை வடக்குக்கு கசியவிடும் இரகசிய திட்டம் இருந்ததை போன்று இதிலும் இரகசிய திட்டம் உள்ளதாகவே கருதவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
பிரதமரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியான உள்நோக்கங்களை கொண்டதாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது. அவருடைய உள்நோக்கம் வடமாகாணத்தில் உள்ளவர்களால் எதுவும் செய்ய முடியாது.
எனவே என்னிடம் ஓடிவாருங்கள் என மக்களை அழைப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது.
மேலும் கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுவலகம் திறக்கப்போவதாக ஊடகங்களில் வெளியாக பார்த்தேன்.
ஆனால் அந்த அலுவலகத்தில் அவருடைய கட்சிக் கொடிகளும், அவருடைய ஆட்களுமே நிற்கின்றார்கள். எனவே இதற்குப் பின்னால் அரசியல் சார்பு உள்ளது. அவர் மேற்படி இரு மாவட்டங்களையும் கஷ்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியமை தவறல்ல. ஆனால் அதன் பின்னால் ஒரு அரசியல் காரணம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து வவுனியா வடக்கு வலயத்தை கஷ்ட பிரதேசமாக பிரகடனப்படுத்த பிரதமரைக் கோரும் தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு மாகாணசபையினால் அத்தீர்மானம் எடுக்கப்பட்டு மாகாண கல்வியமைச்சினால் மேற்படி வலயம் கஷ்ட பிரதேச வலயமாக பிரகடனப்படுத்தப்படவிருக்கின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila