இளைஞர்களை வழிப்படுத்தாத தமிழ் அரசியல் தலைமைகள்


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் யாழ்.குடாநாடு என்ற எல்லை தாண்டி வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் என்பது சமூக நீதிக்கானது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை வித்தியாவுக்கு நடந்த கொடுமைத்தனம் இனிமேல் எங்கும் இடம்பெறலாகாது. இதனை உறுதி செய்வதற்காக குற்றவாளிகளுக்கு உடனடியாக மரணதண்டனை விதிக்கவேண்டும் என்பதாகும்.

எனவே இது தொடர்பில் அரசும் நீதிபரிபாலனமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவே ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை தடுக்கமுடியும்.

இதேநேரம் யாழ்ப்பாண நகர மையத்தில் நேற்று முன்தினம் 20ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது இளைஞர்கள் சிலர் நடந்து கொண்ட முறை மிகப்பெரிய அதிர்ச்சியைத்தந்தது.

இளைஞர்களின் ஆர்ப்பாட்டமும் கண்டனப் பேரணிகளும் ஆரம்ப கட்டங்களில் மனதை உருக்கக் கூடியதாக இருந்தது என்பதை எவரும் மறுத்து விட முடியாது. எனினும் நேரம் செல்லச் செல்ல ஆர்ப்பாட்டத்தில் செருகிக் கொண்ட இளைஞர்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர்.

இத்தகையதொரு பொறுப்பற்ற செயல் என்பது எங்கள் தமிழ் மண்ணில் இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் இல்லை என்பதை உணர்த்தி நின்றது.

அதிலும் குறிப்பாக, அரசியல் ரீதியாக ஜனநாயகப் போராட்டங்கள் பற்றிய விளக்கமின்மை எங்கள் இளைஞர்களிடம் அதீதமாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒரு பகுதியினரிடம் இனம் புரியாத கோபம் காணப்பட்டது.

இந்தக் கோபம் எதற்கானது என்பது தெரியவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் அரசியல் பணியை செய்யவில்லை என்பது உறுதியாகிறது. தமிழ் அரசியல் கட்சி சார்ந்து இளைஞர் அணிகள் உருவாக்கம் பெற்றிருந்தால் எழுந்தமானமான கலகங்கள் ஏற்படுவதற்கு இடம்இருந்திருக்காது.

ஆக, தமிழ் அரசியல் தலைமைகள் எங்கள் இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது இங்கு தெளிவாகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தாத ஜனநாயகப் பண்பை கடைப்பிடிக்கவேண்டும்.

ஆனால் இங்கு வீதிகளில் ரயர் போட்டு எரிக்கப்பட்டன. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட வீதிகள் சேதம் அடைகின்ற வாய்ப்புகள் உண்டு என்பதை உணராமல் இருப்பது வேதனைக்குரியது.

எதுவாயினும் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் இறுக்கமான போக்கை எவரும்  மேற்கொள்ளக் கூடாது என்பது இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தைக் குலைக்கும் நோக்கில் இளைஞர்கள் சிலர் யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல்  நடத்தினராயினும் தாக்குதலில் எந்தவிதமான தொடர்பும் இல்லாத இளைஞர்கள் கைதாகக்கூடிய வாய்ப்புகள் நிறையவே இருந்தன என்பதால் இவர்கள் தொடர்பில் ஒரு சுமுகமான அணுகுமுறையைப் பிரயோகிப்பது நல்லது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila