வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர் விளக்கமறியலில்.. - பிரதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்படி பாடசாலை மாணவியின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மகாலிங்கம் சசிக்குமார் என்ற சந்தேக நபர், வர்த்தகர் துவாரகேஸ்வரன் கொடுத்த முறைப்பாட்டிற்கமைய கடந்த நேற்று முன்தினம் வெள்ளவத்தை பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் நேற்று யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்த நிலையில் யாழ்.நீதிமன்றம் வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்குள்ளானதினால் இன்று மதியம் 2.30 மணியளவில் சந்தேக நபர் காவற்துறை மற்றும் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையிலேயே குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வித்தியா படுகொலை! பிரதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு யாழ்.நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் 15ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21ம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்படவிருந்த போதும் பாதுகாப்பு சீரின்மையினால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படாமல் சந்தேக நபர்களுக்கு முதலாம் திகதி வரையில் விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிற்பகல் சந்தேக நபர்கள் யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்ப்பட்டுள்ளது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila